அடக்கி ஆளுது முரட்டுக்காளை...! அலங்காநல்லூரில் அப்பவே படமாக்கப்பட்ட ஜல்லிக்கட்டு..!!!
1976க்குப் பிறகு ஏவிஎம் நிறுவனம் கொஞ்சம் இடைவெளி விட்டு இருந்தது. ஏவிஎம் செட்டியாரோட மறைவிற்குப் பிறகு அவரோட மகன்களான ஏவிஎம் சகோதரர்கள் 1980ல் கன்னடத்தில் வெளியாகி வெற்றி அடைந்த கன்னிமெய்ய ராத்திரியல்லி என்ற திரைப்படத்தின் மூலம் ராஜசேகர் இயக்குனராக அறிமுகமானார். அவரை வைத்து அதே படத்தை புன்னமினராகு என்ற தெலுங்கு படமாக ரீமேக் பண்ணினாங்க.
அது மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த இயக்குனர் ராஜசேகர் தான் அதற்குப் பிறகு கமலை வைத்து காக்கிச்சட்டை, விக்ரம், ரஜினியை வைத்து படிக்காதவன், மாப்பிள்ளை, தம்பிக்கு எந்த ஊரு, தர்மதுரை ஆகிய வெற்றிப்படங்களைக் கொடுத்தார்.
புன்னமினராகு என்ற தெலுங்கு பட வெற்றியைத் தொடர்ந்து ஏவிஎம் நிறுவனத்துக்கு மறுபடியும் படம் தயாரிக்கலாம் என்ற ஆர்வம் வந்தது. இந்த எண்ணத்தை அவருக்கு நெருக்கமான இயக்குனர் எஸ்.பி.முத்துராமனிடம் சொல்லி ஆலோசனை கேட்டார். எஸ்.பி.முத்துராமனோ ரஜினிகாந்தை வைத்து பண்ணலாம்னு சொன்னார். அப்போ ரஜினிகாந்த் பில்லா, ஜானின்னு மாறுபட்ட படங்களில் நடித்து வந்தார்.
இன்னொருவர் சுமலதா. சுருளிராஜன், ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோரும் ஒப்பந்தம் செய்யப்பட்டாங்க. வில்லனுக்கு என பல நடிகர்களிடம் பேசினாங்க. கடைசியில் தேர்வானவர் ஜெய்சங்கர். அதுவரை கதாநாயகனாக நடித்து வந்த ஜெய்சங்கர் ஏவிஎம் சகோதரர்களின் நட்பினால் வில்லனாக நடிக்க ஒத்துக்கொண்டார். அப்படி உருவான படம் தான் முரட்டுக்காளை.
பஞ்சு அருணாசலம் கதை, வசனத்தில் இளையராஜாவின் இசையில் எஸ்.பி.முத்துராமன் இயக்கினார். அன்று பாடல் ரெக்கார்டிங் நடந்தது. பொதுவா பாடல் எழுதியதும் மெட்டு போடுவது வழக்கம். அன்று இளையராஜா தனியா அமர்ந்து மெட்டுப் போட்டுக்கிட்டு இருந்தாரு. இதைப் பார்த்த ஏவிஎம். குமரன் பாடல் எழுதுவது யாருன்னு இயக்குனர் முத்துராமனிடம் கேட்டார்.
பஞ்சு அருணாசலம் தான் எழுதுறாரு. ஆனா அவர் ஊர்ல இல்ல. வெளியூர் போயிருக்காருன்னு சொன்னார் எஸ்.பி.எம். பாடல் இல்லாம எப்படி பதிவுன்னு பதட்டமானார் ஏவிஎம்.குமரன்.
கொஞ்சம் பொறுங்கன்னு சொன்ன எஸ்.பி.எம். பஞ்சுவுக்கு போன் போட்டு தன்னோட கையில வைச்சிருந்த டேப்ரிக்கார்டர்ல அந்த டியூன அவரு கேட்கும்படி செஞ்சாரு. கொஞ்ச நேரத்துல பாடல் சொல்றேன்னு கட் பண்ணாரு பஞ்சு அருணாசலம்.
கொஞ்ச நேரத்துல போன் பண்ணினவரு இயக்குனர்கிட்ட பாடல் வரிகளைச் சொன்னாரு. அவர் சொல்ல சொல்ல இவர் எழுதி வந்து இசை அமைப்பாளர் இளையராஜாவிடம் கொடுத்தார். அதுதான் எந்தப் பூவிலும் வாசம் உண்டு என்ற பாடல். பாடியவர் எஸ்.ஜானகி. இப்படி தான் எல்லாப் பாடல்களும் தயாரானது.
இந்தப்படத்தில் இடம்பெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்காக மதுரை அலங்காநல்லூருக்கு சென்று விழா நடக்கும் இடத்திற்கே சென்று படப்பிடிப்பு நடத்தினாங்க. அதுவரை யாரும் கண்டிராத அளவில் 3 கேமராவை வைத்து 3 கோணங்களில் பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டது.
இந்தப்படத்தில் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால் ஓடும் ரயிலில் நடக்கும் சண்டைக்காட்சி. ரயில்வேத் துறைக்கிட்ட சிறப்பு அனுமதி வாங்கி 4 கேமரா மூலம் படப்பிடிப்பு நடத்தினாங்க. இதைப்பிரம்மாண்டமாக படமாக்க உதவியர் ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ ரத்னம்.
குடும்பம், காதல், காமெடி, சண்டை, சென்டிமென்ட் என்று ஜனரஞ்சகமா இருந்ததால படம் பிரம்மாண்டமா வெற்றி பெற்றது.