கம்ப்யூட்டர் கிராபிக்ஸில் கலக்கிய தமிழ்சினிமாக்கள்..!
ரசிகர்களை திரையரங்கிற்கு வரவழைத்த மாயாஜால வித்தை எது என்று சொன்னால் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் தான் என்று சட்டென்று சொல்லிவிடலாம். அந்த அளவு இதன் சிறப்பம்சம் நம்மை ஈர்த்தது.
பெரும்பாலும் பிரம்மாண்டமான அளவில் தயாராகும் படத்திற்கு தான் இந்த கிராபிக்ஸ் தேவைப்பட்டது. இயக்குனர் ஷங்கரின் படங்களில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் தவறாமல் இடம்பெறும்.
கமல் படங்களிலும் இந்த சிறப்பம்சம் இடம்பெற்று ரசிகர்களை இருக்கையின் நுனியில் உட்கார வைக்கும். அத்தகைய சிறப்பம்சங்கள் அடங்கிய ஒரு சில படங்களைப் பற்றி இங்கு பார்க்கலாம்.
ஆடிவெள்ளி
1990ல் உருவான ஆடிவெள்ளி படத்தை ராம நாராயணன் இயக்கினார். இந்தப்படம் ஒரு பக்தி படம். இதன் கிளைமாக்ஸ் காட்சியில் கிங் கட்டாரி என்ற பெரிய உருவமும், கோப்ராவும் அனகோண்டாவும் சண்டை போடும் காட்சியைப் படமாக்கியிருப்பார்கள்.
இவை அனைத்தும் கம்ப்யூட்டர் ஜீனியஸ் என்று அழைக்கப்படும் எலக்ட்ரோ- எவினோமேஷன் என்ற டெக்னாலஜியில் உருவானது. அப்போது படம் பார்த்த ரசிகர்கள் இந்த காட்சியை அதிசயித்துக் கண்டுகளித்து திரையரங்கை விட்டு வெளியே வந்தனர்.
குட்டி பிசாசு
அதே போல் 2010ல் வெளியான குட்டி பிசாசு படத்தையும் ராம நாராயணன் தான் இயக்கினார். இது இவருக்கு 121வது படம். இந்தப்படத்தில் வித்தியாசமான கதைக்களத்தை அறிமுகப்படுத்தியிருப்பார். படத்தில் ரோபோட் கார் சண்டை போடும் காட்சி பிரமிக்கத்தக்க வகையில் இருக்கும். கார் ரோபோவாக மாறி திரும்பவும் காராக மாறி என அட்டகாசம் செய்யும். பறந்து பறந்து சண்டை போடும்.
கிராபிக்ஸ் புகுந்து விளையாடி இருக்கும். குட்டி பிசாசு என்ற பாடலில் ஆங்க்ரி பேர்டும், ஒரு பொம்மையும் இரு குழந்தைகளுக்கு மத்தியில் ஆட்டம் போடும். ரசிகர்களுக்கு வித்தியாசமான ஒரு உணர்வை அளித்து பரவசப்படுத்தியிருப்பார். இது ஒரு அனிமேஷன் படம்.
விஸ்வரூபம்
2013ல் வெளியான இந்தப்படத்தை கமல்ஹாசன் தயாரித்து கதை எழுதி நடித்து இயக்கியுள்ளார். படத்தில் பல இடங்களில் கிராபிக்ஸ் அற்புதமாகப் பயன்படுத்தப்பட்டு இருக்கும்.
இதில் என்ன வேடிக்கை என்றால் எந்த இடத்தில் கிராபிக்ஸ் பயன்படுத்தப்பட்டது என்பதே தெரியாத வகையில் உருவாக்கப்பட்டு இருக்கும். இந்தப்படத்திற்காக ஏரோ 3டி என்ற புதிய சவுண்ட் எபெக்டைக் கொண்டு வந்தார். விஷ_வல் எபெக்ட்ஸ் என்ற டெக்னாலஜியில் இந்த படத்தில் பெரும்பாலான காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
படம் ரசிகர்கள் மத்தியில் வெகுவாக வரவேற்கப்பட்டு பெரும் வெற்றியைத் தேடித்தந்தது. படத்தின் 2ம் பாகமும் வெளியானது. ஆனால், இதற்கு முதல் பாகம் போல வரவேற்பு கிடைக்கவில்லை.
எந்திரன்
2010ல் வெளியான படம் எந்திரன். பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் படைப்பில் உருவான இந்தப்படம் முழுவதும் ரோபோட்டை மையமாகக் கொண்ட கதை தான். படம் முழுவதும் வரும் கிராபிக்ஸ் காட்சிகள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.
படத்திற்கு ரசிகர்கள் பெரிதும் வரவேற்பு கொடுத்தனர். மாபெரும் வெற்றிப்படமானது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் அனைத்தும் பட்டையைக் கிளப்பின. இதன் 2ம் பாகத்திற்கு அந்த அளவு வரவேற்பு கிடைக்கவில்லை.
ஏழாம் அறிவு
2011ல் உருவான சூர்யாவின் முற்றிலும் மாறுபட்ட இரட்டை வேடத்தில் நடித்து ஆச்சரியப்படுத்திய படம். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவான இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் வெகுவாகப் பேசப்பட்டது. படம் அறிவியல் சார்ந்த கதை அம்சம் கொண்டதாக இருந்ததால் கிராபிக்ஸ் காட்சிகள் சிறப்பாக வந்திருந்தன.
படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது. ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர். இந்தப்படத்தில் வரும் வில்லன் டாங்லீ ஒரு ஹாலிவுட் நடிகர். பிரமாதமாக நடித்து இருப்பார்.