Connect with us

latest news

நெல்லை டவுன் பஸ்ஸைக் கலக்கிய 80, 90ஸ் பாடல்கள்

சமீபத்தில் நெல்லைக்கு உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்தேன். சமாதானபுரம் வந்ததும் இறங்கி அங்கிருந்து ஒரு தனியார் டவுன் பஸ் ஒன்றில் ஏறி டவுனுக்குச் சென்றேன். பஸ் ஏறியதுமே பழைய 90ஸ் பாடல்கள் ஒலித்தன. என்ன ஒரு மெட்டு, என்ன ஒரு பாட்டு அடடா என நம்மை பழைய காலத்திற்கு கூட்டிச் சென்று நமது இனிமையான இளமைக்காலத்தை நினைவூட்டியது.

குத்துவிளக்காக குலமகளாக என்ற பாடல் என்ன ஒரு இனிமையான இசை. நம்மை பஸ்ஸில் ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்தபடி தலையாட்ட வைத்தது. கூலிக்காரன் படத்திற்காக எஸ்.பி.பாலசுப்பிரமணியம், எஸ்.ஜானகி பாடிய இந்தப்பாடல் நம்மைத் தாலாட்டியது தனி ரகம். குத்துவிளக்காக குலமகளாக நீ வந்த நேரம்…நான் பாடும் ராகம்…என் வானிலே நீ வெண்ணிலா…நட்சத்திரம் உன் கண்ணிலா…ஒளி சிந்த வந்த தேரே என் உள்ளம்தனில் ஓடும் தேனே…!

என்ன அருமையான வரிகள். நம்மை வெகுவாக ரசிக்க வைத்தது. பாடல் காட்சியில் விஜயகாந்தும், ரூபினியும் போடும் ஆட்டம் நம்மை ரசிக்க வைத்தது. பாடலின் இடையே வரும் வரிகளை படித்து ரசியுங்கள்.

பல வண்ண பூக்கள் பாடுது பாக்கள் அது ஏன் தேன் சிந்துது, அது நீ பூ என்குது
பூவில் ஊறும் வண்டு போதை ஒன்று கொண்டு
அது ஏன் திண்டாடுது போதைதான் பண்பாடுது
சோலைக்கொரு வசந்தம்போல் நீ வந்தாய்
காளைக்கென்று சொந்தம் என்று நீ ஆனாய்
நீ நேசம் தர அதில் நான் பாசம் பெற…

என்று வரிகள் வருகிறது. அதே போல் அடுத்த ஸ்டேன்ஷாவில் வரும் வரிகளைக் கவனியுங்கள்.

ரகசிய கனவு தந்த இந்த இரவு
ஏன் நமை வாட்டுது அது ஏன் சூடேற்றுது
பொட்டு வைத்த நிலவு புத்தம் புது உறவு
இன்று ஏன் தடுமாறுது சுகம் தான் பரிமாறுது
பௌர்ணமி முற்றத்திலே வெளிச்சம் தான்
பைங்கிளி முத்தம் பெற கூச்சம் தான்…
நானும் மெல்ல அள்ள.. நாணம் உன்னை கிள்ள ….!

அடடா என்ன ஒரு சுகமான வரிகள்…

அது சரி…இதன் இசை அமைப்பாளர் யார் தெரியுமா? நம்ம டி.ராஜேந்தர் தான்…அதான் பாடல் சக்கை போடு போடுது. 1987ல் இந்தப் படம் வெளியானது.

அடுத்த பாடல் என்ன என்று ஆர்வம் இப்போது நமக்குள் வந்து விட்டது. அந்த பாடலும் செம ரகம் தான்.


பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா… பாடல் இடம் பெற்ற படம் உங்களுக்கேத் தெரியும். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பாண்டியன். பாடலில் ரஜினியும், குஷ்பூவும் ஆடும் காதல் நடனம் செம சூப்பராக இருக்கும். அதிலும் ரஜினியின் ஸ்டைலான ஸ்டெப்களைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். படகில் ரஜினியும், குஷ்பூவும் பயணித்த படி ஆடும் இந்த ஆட்டம் நமக்குள் ஒரு ஆனந்தக்களிப்பை உண்டு பண்ணுகிறது. அதிலும் கிறங்கடிக்கும் கவர்ச்சி விருந்து படைத்திருப்பார் குஷ்பூ. ரஜினிகாந்த் குஷ்பூவை இறுக்கி அணைத்தபடி பின்புறமாக வந்து கழுத்தோரத்தில் கொடுக்கும் முத்தம் நம்மை குதூகலிக்கச் செய்கிறது.

இந்தப்படம் 1992ல் வெளியானது. கே.எஸ்.சித்ரா, மனோ பாடிய பாடல். இளையராஜாவின் இன்னிசையில் உருவானது.

பாடலின் இடையில் நீ சிரிக்க நான் அணைக்க பூ மணக்க தேன் கொடுக்க
தேன் கொடுத்து நீ எடுக்க நாள் முழுதும் நான் மயங்க..பார் கடல் போலே தான் நீயிருக்க பாய்மரக் கலம் போலே நான் மிதக்க
அடடா…என்ன அருமையான கற்பனை என்று நம்மை வியக்க வைப்பதற்குள் அடுத்த வரிகள் இப்படி விரிகிறது.

ராத்திரி தூங்காமல் நான் தவிக்க ராஜனின் லீலைகள் நோய் தணிக்க, வெட்கம் தீரு நான் உன்னைச் சேர தொட்டு விளையாட ஆனந்தம் கூடாதோ…இதற்கு மேலும் நாம் விளக்க தேவையில்லை. பாடலின் வரிகள் அவ்வளவு எளிமையானவை. விளக்கங்கள் அதிலேயே போதும் போதும் என்று சொல்லும் அளவிற்கு உள்ளது.

அடுத்த பாடலைப் பாருங்கள். கேட்க கேட்க தெவிட்டாத சுகத்தைத் தருகிறது. மாலைக்கருக்கலில் சோலைக்கருங்குயில் ஏன் பாடுதோ? இது என்ன படம் என்று தெரியுமா?

இதுவும் நம்ம கேப்டன் படம் தான். 1985ல் வெளியான நீதியின் மறுபக்கம் படத்தின் முத்தான பாடல் இது. கே.ஜே.யேசுதாஸ், ஜானகி இணைந்து பாடிய பாடல். படத்தில் விஜயகாந்தும், ராதிகாவும் புன்சிரிப்பைப் பூத்தபடி பாடலை துவக்குகின்றனர். பாடலின் இசை நம்மை மெதுவாக எங்கேயோ ஒரு ஆனந்தமான இடத்திற்கு கூட்டிச் செல்வதைப் போல ஒரு உணர்வை ஏற்படுத்தும் என்பது திண்ணம். பாடலின் வரிகளைக் கொஞ்சம் கவனியுங்கள்.
ஒன்னோட கண்ணுக்குள் கண்ண வச்சு ஒலகத்த கண்டு கொண்டேன்…ஒன்னோட நெஞ்சுக்குள் நெஞ்ச வச்சு ஒறவொண்ணு கொண்டு வந்தேன்…நீ சிரிச்சா பூ உதிரும்…நீ அணைச்சா தேன் சிதறும்..இன்னும் வரும் வரிகளைக் கவனியுங்கள்…நம் தமிழின் சுவை உங்களுக்கே புரியும்…!

இரவெல்லாம் பூமாலை ஆகட்டுமா…மகராசன் தேகத்திலே மருதாணி நான் வந்து பூசட்டுமா மகராணி பாதத்திலே பூ மடி மேல் நான் மயங்க நாள் விடிந்தால் கண் உறங்கு…கண்ணுக்குள்ளே வா வா…நெஞ்சுக்குள்ளே போ போ…அட அட….செம சூப்பர்…வரிகள் தான்…!

அடுத்த பாடல் இது. ஊரைக் கூட்டிச் சொல்வேன் காதல் பாட்டு…வா வா கண்ணா நீயும் காதில் கேட்டு…ஆசை அரும்புகள் வாவ்…வாவ்…மலரும் நாளிது…வாவ்..வாவ்…வீணை நரம்புகள்…வாவ்…வாவ்…மீட்டும் நாளிது…ஐ லவ் யூ…ஐ லவ் யூ…ஐ ல…வ் யூ….! என ஆட்டம் போட வைக்கும் டூயட் இது. இந்தப் பாடலுக்கு நவரச நாயகன் கார்த்திக்கும், குஷ்பூவும் இணைந்து ஆடுகிறார்கள்.

பாடல் இடம் பெற்ற படம் இது நம்ம பூமி. எஸ்.பி.பாலசுப்பிரமணியம், எஸ்.ஜானகி இணைந்து பாடிய பாடல் இது. இசைஞானி இளையராஜாவின் கைவண்ணத்தில் உருவானது. 1992ல் வெளியான படம். பி.வாசுவின் இயக்கத்தில் உருவானது. இந்தப் பாடலின் இடை வரிகளை உற்றுப்பாருங்கள்.

கண்ணே உன் உதடுகள்தான் பொன்வண்ணத் தகடுகளா…உன் நெஞ்சில் நுழைவதற்கு உண்டான கதவுகளா…என கேட்கும் ரசனை நம்மையே எங்கே இருக்கிறோம் என தேடச் செய்கிறது. ஏனென்றால் அந்த அளவு நாம் பாடலின் ஒலியுடன் காற்றில் மிதக்க ஆரம்பித்து விடுகிறோம்.

அடுத்த பாடல் விஜயகாந்து தான். மைனாவே மைனாவே…இது என்ன மாயம்…பாடல். பாடல் இடம் பெற்ற படம்…வானத்தை போல…பாடியவர்கள்…உன்னிமேனன், கே.எஸ்.சித்ரா. படம் வானத்தைப் போல. வெளியான ஆண்டு 2000. எஸ்.ஏ.ராஜ்குமாரின் இன்னிசையில் வசந்த் இயக்கிய படம். பாடலை கேட்டால் நம்மை மெய்மறக்கச் செய்யும். இதுதாங்க…அடுத்தும் நம்ம கேப்டன் தான்…டிரைவர் விஜயகாந்தின் ரசிகராக இருப்பார் போல….கூண்டுக்குள்ள உன்னை வச்சி…பாடல்.. 1992ல் வெளியான சின்னக்கவுண்டர்.

எஸ்.பி.பாலசுப்பிரமணியம், எஸ்.ஜானகி பாடிய பாடல். ஆர்.வி.உதயகுமாரின் வைர வரிகளில் உதயமான பாடல். தென்னங்கிளையும் தென்றல் காத்தும் குயிலும் அடி மானே உன்னை தினம் பாடும்…கஞ்சி மடிப்பும் கரை வேட்டி துணியும் இந்த மாமன் கதையை தினம் பேசும்…பொள்ளாச்சி சந்தையிலே கொண்டாந்த சேலையிலே சாயம் இன்னும் விட்டு போகல…பன்னாரி கோயிலுக்கு முந்தான ஓரத்திலே நேர்ந்து முடிச்ச கடன் தீரல…மானே மானே ஒன்னத்தானே…எண்ணி நானும் நாளும் தவிச்சேனே… இதுதான் அந்தப் பாடலின் இடையில் வரும் வரிகள். நம்மை இந்தப்பாடல்கள் இப்போது வரும் பாடல்களுடன் கொஞ்சம் கூட ஒப்பிட முடியாது என்று ஆணித்தரமாகச் சொல்ல வைக்கின்றன. அது ஒரு பொற்காலம்.

அடுத்த பாடலைப் பாருங்க…அதுவும் நம்ம கேப்டன் பாடல் தான்…படம் சத்ரியன். மாலையில் யாரோ மனதோடு பேச…தேகம் பூத்ததே….ஓ…ஓ… மோகம் வந்ததோ….ஓ…ஓ…பாடல். பானுப்பிரியா தன் காதலனை தனிமையில் நினைத்து உருகும் பாடல். இது எவர் க்ரீன் சாங் என்றால் மிகையில்லை. கே.சுபாஷ் இயக்க, இளையராஜாவின் இன்னிசையில் உருவான பாடல். மணிரத்னம் தயாரிப்பு. இது ஒரு அற்புதமான படம். சுவர்ணலதா பாடிய இந்தப் பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இப்போது கேட்டாலும் இந்தப் பாடல் நம்மை ரீங்காரம் போடச் செய்யும். பாடலின் இடையே வரும் வரிகள் இவை. கறை மேல் நானும் காற்று வாங்கி விண்ணைப் பார்க்க…கடல் மீன் கூட்டம் ஓடி வந்து கண்ணைப் பார்க்க….அடடா நானும் மீனைப் போல கடலில் வாழக்கூடுமோ…அலைகள் வெள்ளி ஆடை போல உடலின் மீது ஆடுமோ…நெஞ்சமே பாட்டெழுது…அதில் நாயகன் பேரெழுது….

google news
Continue Reading

More in latest news

To Top