மலை பெயரில் மலைக்க வைத்த படங்கள்
மலைகள் பெயரில் எத்தனையோ தமிழ் சினிமாக்கள் வந்துவிட்டன. அனைத்தும் நம்மை ரசிக்க வைத்தன. அப்படிப்பட்ட படங்கள் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.
மலைக்கள்ளன்
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நடிப்பில் வெளியான இந்தப்படம் ஜனாதிபதி விருதை வென்றது.
1954ல் ஸ்ரீராமுலு நாயுடுவின் இயக்கத்தில் வெளியானது. எம்ஜிஆர், பானுமதி, ராமகிருஷ்ணா, ஸ்ரீராம் உள்பட பலர் நடித்தனர். அப்போதே இந்தப்படம் 90லட்சம் ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்படத்திற்கு கதை வசனம் எழுதியவர் மு.கருணாநிதி. எம்ஜிஆர் நடிப்பில் 6 மொழிகளில் வெளியான முதல் படம் இதுதான். எத்தனை காலம்தான் ஏமாற்றுவார், உன்னை அழைத்தது யாரோ, நல்ல சகுணம் நோக்கி, நானே இன்ப ரோஜா, தமிழன் என்றொரு இனம் ஆகிய பாடல்கள் உள்ளன.
மலையூர் மம்பட்டியான்
ராபர்ட் ராஜசேகரின் இயக்கத்தில் 1983ல் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் மலையூர் மம்பட்டியான். மலையூர் என்ற கிராமத்தில் வாழ்ந்த மம்பட்டியான் என்ற மனிதனின் கதையை தழுவி எடுக்கப்பட்டது. இளையராஜாவின் இன்னிசையில் பாடல்கள் அனைத்தும் பட்டையைக் கிளப்பின. படத்தில் தியாகராஜன், சரிதா, செந்தாமரை, சங்கிலிமுருகன், கவுண்டமணி, சில்க் ஸ்மிதா உள்பட பலர் நடித்துள்ளனர். பாடல்களை கங்கை அமரன், வாலி, வைரமுத்து எழுதினர். சின்ன பொண்ணு சேல, ஆடுதடி, காட்டு வழி போற பொண்ணே கவலைப்படாதே, வெள்ளரிக்கா பிஞ்சு ஒண்ணு ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
அண்ணாமலை
1992ல் வெளியான மெகா ஹிட் திரைப்படம் அண்ணாமலை. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரையுலக வரலாற்றில் இந்தப்படம் ஒரு மைல் கல். அவருடன் சரத்பாபு, குஷ்பூ, ஜனகராஜ், நிழல்கள் ரவி, வினுசக்கரவர்த்தி, மனோரமா, ரேகா உள்பட பலர் நடித்துள்ளனர். தேவாவின் இசையில் பாடல்கள் பட்டையைக் கிளப்பின.
விறுவிறுப்பான திரைக்கதை அம்சம் கொண்ட இந்தப்படத்தை இயக்கியவர் சுரேஷ் கிருஷ்ணா. கே.பாலசந்தர் தயாரிப்பில் வெளியானது. அண்ணாமலை அண்ணாமலை, கொண்டையில் தாழம்பூ, ஒரு பெண் புறா, றெக்கைக் கட்டிப் பறக்குதடி, வந்தேன்டா பால்காரன், வெற்றி நிச்சயம் ஆகிய பாடல்கள் படத்தின் வெற்றிக்கு வழிகோலின.
திருமலை
2003ல் வெளியான விஜயின் அதிரடி திரைப்படம். ரமணா இயக்கிய இந்தப்படத்தை தயாரித்தவர் புஷ்பா கந்தசாமி. விஜய், ஜோதிகா, விவேக், ரகுவரன், கௌசல்யா, கருணாஸ் உள்பட பலர் நடித்துள்ளனர். வித்யாசாகர் இசையில் பாடல்கள் அத்தனையும் அதிரடி ரகங்கள். தாம்தக்க தீம்தக்க, வாடியம்மா ஜக்கம்மா, நீயா பேசியது, அழகூரில், திம்சுக்கட்டை ஆகிய பாடல்கள் திரையரங்கில் நம்மை எழுந்து ஆட்டம் போட வைக்கும்.
திருவண்ணாமலை
2008ல் பேரரசுவின் இயக்கத்தில் வெளியான படம். அர்ஜூன், பூஜா காந்தி, கருணாஸ் உள்பட பலர் நடித்துள்ளனர். படத்தின் கதை விறுவிறுப்பாக இருந்தாலும் சில இடங்களில் லாஜிக் மீறப்பட்டு இருந்தது. அதனால் படம் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை. ஆனால் படம் வணிகரீதியாக வெற்றி பெற்றது. ஓம் சிவா சிவா, நம்ம நடை, அடியே, காடை, சொல்ல சொல்ல, எம்மையாளும் ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.