More
Categories: Cinema History Cinema News latest news

புரட்சித்தலைவர் வில்லன்…இவர் ஹீரோ …இருவருக்கும் பிரம்மாண்டமான வாள் சண்டை…அப்பா…எப்படியிருக்கும்?

கமல், ரஜினி, மாதவன் இவர்களுக்கே முன்னோடியாக இருந்தவர் தான் இந்த பழம்பெரும் நடிகர்…!

ரஞ்சன் பாடகர், நடனக்கலைஞர், வில்வித்தையில் திறமைசாலி, வாள்வீச்சு வீரர், நாடகக்கலைஞர், ஓவியர், கிரிக்கெட் வீரர் , குதிரை சவாரியில் வல்லவர், நீச்சல் வீரர் அதுமட்டுமா…தமிழ் சினிமாவுக்கு வந்த முதல் எம்ஏ பட்டதாரியும் இவர் தான்.

Advertising
Advertising

Ranjan

இன்னும் சொலல்லப்போனால் பத்திரிகையாளர், மேஜிக் நிபுணர், எழுத்தாளர்…அடேங்கப்பா ஒரு மனுஷனுக்குள்ள இவ்ளோ திறமையா? என நம்மை ஆச்சரியப்பட வைக்கிறார்.

கமல், ரஜினி, மாதவன் இவர்கள் எல்லாம் பாலிவுட்டில் படங்கள் நடித்தாலும் விரல் விட்டும் எண்ணும் அளவில் தான் நடித்தனர். ஆனால் இவர்களுக்கு முன்பே பாலிவுட்டில் 10க்கும் மேற்பட்ட இந்திப்படங்களில் நடித்து தனது திறமையை நிரூபித்துள்ளார் ரஞ்சன்.

தமிழ்சினிமாவின் முதல் ஆக்ஷன் ஹீரோவே இவர் தான். மேலும் படங்களில் வில்லனுக்கும் நட்சத்திர அந்தஸ்தை உருவாக்கியவரும் இவர் தான். தனக்கென்று தனி ஸ்டைல், மேனரிஸம் என்று ரசிகர்களைத் தன் பக்கம் இழுத்து வசூல் சக்கரவர்த்தியாக விளங்கினார்.

இப்போது வரை விமானம் ஓட்டத் தெரிந்த ஒரே நடிகர் இவர் தான். இவர் குறைந்த அளவான படங்களே தமிழில் நடித்திருந்ததால் இன்றைய தலைமுறைக்கு இவரைப் பற்றி தெரியாமலே போய்விட்டது.

மங்கம்மா சபதம், சந்திரலேகா, நீலமலைத் திருடன் என காலத்தால் அழிக்க முடியாத வெற்றிப்படங்களில் நடித்தவர்.

இவர் 2.3.1918ல் திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கத்தில் ராமநாராயணசர்மாவிற்கும், அலமேலு தம்பதியருக்கும் மகனாகப் பிறந்தார். இவர் உடன் 10 பேர் பிறந்தனர். இவர் 4வது பிள்ளை. இவரது இயற்பெயர் வெங்கட ரமணா சர்மா. பெற்றோர் இவருக்கு இட்ட பெயர் ரமணி.

ரஞ்சனின் குடும்பம் அவர் பிறப்பதற்கு முன்பே சென்னை வந்து குடியேறிவிட்டதால் அவர் பிறந்ததே சென்னை மயிலாப்பூரில் தான். பள்ளி, கல்லூரி படிப்பை சென்னையிலேயே முடித்தார். சிறுவயதிலேயே நாட்டியம், நாடகத்தில் நடிக்க ஆசை இருந்ததால் தனது விருப்பத்தை தந்தையிடம் தெரிவித்தார்.

அவரும் மகனுக்கு முறையாக சங்கீதம், நடனம் கற்றுக்கொள்ள ஏற்பாடு செய்தார். கல்லூரி கலை விழாவில் நாட்டிய நாடகத்தில் அசத்தினார் ரஞ்சன்.

Ranjan

அப்போது இவரை ஜெமினி ஸ்டூடியோவின் கதை இலாகாவைச் சேர்ந்த வேம்பத்தூர் கிருஷ்ணனும் ஒருவர். இவரது நடனத்திறமை மற்றும் படபடவென்று திக்காமல் அழகாக வசனம் பேசிய இவரை திரைப்படங்களில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று எண்ணினார்.

1941ல் வெளியான எம்.கே.தியாகராஜபாகவதர் நடித்த அசோக்குமார் படத்தில் இளம் புத்தராக நடிக்க ஒரு நபர் தேவைப்பட்டது. இயக்குனர் பி.ஜி. ராகவாச்சாரி இதற்கான நபரைத் தேடிக்கொண்டு இருந்தார். வேம்பத்தூர் கிருஷ்ணன் அவரிடம் ரஞ்சனை அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினார்.

அவருக்கு அந்த புத்தர் வேடம் கொடுக்கப்பட்டது. படத்தில் இவருக்கு வசனமே இல்லை. இந்தப்படத்தில் எம்ஜிஆர் ஜூனியர் ஆர்டிஸ்ட். அதே ஆண்டில் எஸ்.சௌந்தரராஜன் இயக்கத்தில் ரிஸ்ய சிருங்கர் என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார்.

தொடர்ந்து காதல் காட்சிகள் இல்லாமலேயே தமிழ் படத்தை எடுக்க எண்ணிய வாசன் நந்தனார் படத்தை தயாரித்தார். இப்படத்தில் நந்தனாராக தண்டபாணி தேசிகரும், சிவபெருமானாக ரஞ்சனும் நடித்துள்ளனர். படத்தில் ரஞ்சனின் சிவதாண்டவம் செம மாஸாக இருந்தது.

1942ல் வெளியான பக்த நாரதர் திரைப்படத்தில் ரஞ்சன் நாரதராக நடித்தார். 1943ல் வெளியான மங்கம்மா சபதம் தான் இவரது முதல் வெற்றிப்படம். இதில் ரஞ்சனுக்கு இரட்டை வேடம். நடிகை வைஜெயந்திமாலாவின் அம்மா வசுந்தராதேவி இவருக்கு ஜோடி. 1945ல் ஷாலிவாகன் படத்தில் நடித்தார். இதில் எம்ஜிஆர் வில்லன். இருவரும் மோதும் வாள்சண்டை பிரபலம். தொடர்ந்து அவரது திரை உலக வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்தது பிரம்மாண்டமான சந்திரலேகா.

Ranjan

வாசன் தயாரிப்பில் வெளியானது. இதில் ரஞ்சன் தான் வில்லன். அவரது அபார நடிப்புத்திறமையைக் கண்ட வாசன் அவரை நிஷான் என்ற இந்திப்படத்தில் நடிக்க வைத்தார்.

இது சந்திரலேகாவின் இந்தி ரீமேக். தொடர்ந்து இவர் இந்திக்குச் சென்ற போது தமிழில் எம்ஜிஆர், சிவாஜி உச்ச நட்சத்திரங்களாக இருந்தனர். மீண்டும் தமிழுக்குத் திரும்பிய ரஞ்சன் நீலமலைத்திருடனில் நடித்தார். இது அன்றைய உச்ச நட்சத்திரங்களையும் மிரள வைத்தது. இந்தப்படம் எம்ஜிஆருக்காகவே உருவாக்கப்பட்ட கதையாம். தேவர் தயாரிக்க முடிவு செய்தார்.

எம்ஜிஆருக்கும் தேவருக்கும் அப்போது சிறிய மனஸ்தாபம். அதனால் எம்ஜிஆர் கால்ஷீட் தராமல் இழுத்தடித்தாராம். அதனால் தான் படம் ரஞ்சனுக்குச் சென்றது. மின்னல் வீரன், ராஜா மலையா சிம்மன் ஆகிய படங்களில் நடித்தாலும் வெற்றி பெறவில்லை. கடைசியாக நடித்த படம் கேப்டன் ரஞ்சன். இது 1969ல் வெளியானது.

தனது மனைவி கமலா மருத்துவர் என்பதால் அவருடனே சென்று அமெரிக்காவில் செட்டிலாகி விட்டார். 1983ல் நியூஜெர்சியில் மாரடைப்பால் காலமானார்.

Published by
sankaran v

Recent Posts