2000களில் வெளியான சூப்பர்ஹிட் படங்கள் - ஓர் பார்வை
80ஸ் குட்டீஸ்களுக்கு 2000 படங்கள் தான் சுவாரசியத்தைத் தந்தவை. அந்தப்படங்கள் தான் நியூ ட்ரெண்டில் வெளிவந்தவை. இயக்கத்திலும் சரி. திரைக்கதை அமைப்பிலும், காமெடியிலும் என அனைத்துமே வித்தியாசமானதாக உருவெடுத்தன. அந்தவகையில் 2000களில் வெளியான சில சூப்பர்ஹிட் படங்கள் பற்றிப் பார்ப்போம்.
சந்திரமுகி
பி.வாசு இயக்கத்தில் 2005ல் வெளியான அதிரடி கலந்த த்ரில்லர் திரைப்படம் சந்திரமுகி. ரஜினிகாந்த், நயன்தாரா, ஜோதிகா, வடிவேலு, பிரபு, நாசர், மாளவிகா, தியாகு, மதன்பாப் உள்பட பலர் நடித்துள்ளனர். வித்தியாசாகரின் இசையில் பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பின.
இந்தப்படத்தில் ரஜினிகாந்த், வடிவேலுவின் காமெடி ட்ராக் செமயாக இருந்தது. கிளைமாக்ஸ் காட்சியில் ஜோதிகாவின் நடிப்பு அட்டகாசமாக இருக்கும். தேவுடா, தேவுடா, கொக்கு பற பற, அத்திந்தோம் திந்தியும், கொஞ்ச நேரம், கொஞ்சநேரம், ராரா சரசகு ராரா, அண்ணணோட பாட்டு ஆகிய பாடல்கள் இந்தப்படத்தில் தான் இடம்பெற்றுள்ளன.
அந்நியன்
ஷங்கரின் இயக்கத்தில் 2005ல் வெளியான படம் அந்நியன். இந்தப்படத்தில் விக்ரம், சதா, விவேக், பிரகாஷ்ராஜ், யானா குப்தா, நாசர், கலாபவன் மணி, நெடுமுடி வேணு உள்பட பலர் நடித்துள்ளனர். முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் வரும் விக்ரமின் நடிப்பு படத்தில் அருமையாக இருந்தது.
இந்தப்படத்தில் விக்ரம் அந்நியனாகவும், அம்பியாகவும், ரொமோவாகவும் வெவ்வேறு கெட்டப்புகளில் வந்து அசத்துகிறார். கிளைமாக்ஸ் காட்சியில் அந்நியனாக வரும் விக்ரம் திடீரென அம்பியாக பேசுகிறார். அம்பியாக இருக்கும்போதே திடீரென அந்நியனாக மாறுகிறார். திரும்ப மாறி மாறி ஒரே காட்சியில் நடித்து ரசிகர்களின் அப்ளாஸை அள்ளுகிறார்.
ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் பாடல்கள் அனைத்தும் சக்கைப் போடு போட்டன. குமாரி, காதல் யானை, கண்ணும் கண்ணும் நோக்கியா, ஐயங்காரு வீட்டு அழகே ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
மின்னலே
2001ல் வெளியான இப்படம் காலேஜ் மாணவர்களை சுண்டியிழுத்தது. ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் பாடல்கள் அனைத்தும் நம்மை ஆட்டம் போட வைத்தன. மாதவன், அப்பாஸ், ரீமா சென், விவேக், நாகேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். இயக்குனர் கௌதம் மேனனுக்கு இதுதான் முதல் படம். இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் வெகுவாக வரவேற்பைப் பெற்று பெரும் வெற்றியைப் பெற்றது.
அழகிய தீயே, ஒரே ஞாபகம், மடி மடி, நெஞ்சைப் பூப்போல், ஓ மாமா மாமா, பூப்போல் பூப்போல், வேறென்ன வேறென்ன, வசீகரா என் நெஞ்சினிக்க, வெண்மதி வெண்மதியே நில்லு ஆகிய துள்ளலான பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
பஞ்சதந்திரம்
2002ல் வெளியான இந்தப் படத்தில் மாறுபட்ட கோணத்தில் நகைச்சுவைக் காட்சிகள் உருவாகி இருந்தன. கே.எஸ்.ரவிக்குமாரின் இயக்கத்தில் கமல், சிம்ரன், ஜெயராம், ரம்யா கிருஷ்ணன், ஸ்ரீமன், யூகிசேது, சங்கவி, ரமேஷ் அரவிந்த் உள்பட பலர் நடித்துள்ளனர்.
தேவாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர். என்னோடு காதல், வந்தேன் வந்தேன், காதல் பிரியாமல், வை ராஜா வை, மன்மத லீலை ஆகிய பாடல்கள் உள்ளன. கிரேசி மோகனின் வசனத்தில் காமெடி அனைத்தும் நான் ஸ்டாப்பாக வந்துள்ளன.
யாரடி நீ மோகினி
2008ல் வெளியான இப்படத்தில் தனுஷ், நயன்தாரா, ரகுவரன், கருணாஸ், சரண்யா மோகன், மனோபாலா உள்பட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். ஏ.ஜவஹர் இயக்கியுள்ளார். படம் தனுஷூக்கு பெரும் வெற்றியைக் கொடுத்தது. படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர்.
நயன்தாராவின் நடிப்பு பிரமாதமாக இருந்தது. எங்கேயோ பார்த்த, ஓ Nபி பேபி, ஒரு நாளைக்குள், பாலக்காடு பக்கத்திலே, வெண்மேகம் பெண்ணாக, நெஞ்சை கசக்கி ஆகிய பாடல்கள் இடம்பெற்றன.