Cinema History
80களில் கலக்கிய நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் அட்டகாசமான படங்கள்
நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடிப்பில் எல்லா படங்களுமே சூப்பராகத் தான் இருக்கும். அவரது நடிப்புக்கு சொல்லவா வேண்டும்? அவர் தான் நடிகர் திலகமாச்சே. எந்த ஒரு கேரக்டரில் நடித்தாலும் அதைக் கண் முன் கொண்டு வந்து நிறுத்துவதில் அவருக்கு நிகர் அவரே.
1980களில் சிவாஜியின் நடிப்பில் ரசிக்கத்தக்க அளவிலான படங்களைப் பற்றி இப்போது பார்ப்போம்.
ரத்த பாசம்
கே.விஜயன் இயக்கத்தில் 1980ல் வெளியான படம் ரத்த பாசம். நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ஸ்ரீபிரியா, எம்.என்.நம்பியார், மேஜர் சுந்தரராஜன், தேங்காய் சீனிவாசன் உள்பட பலர் நடித்துள்ளனர். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்துள்ளார். பாடல்கள் அனைத்தும் சூப்பர்.
கல் தூண்
1981ல் மேயரின் இயக்கத்தில் வெளியான படம். சிவாஜி, கே.ஆர்.விஜயா இருவரும் போட்டி போட்டு நடித்துள்ளனர். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்துள்ளார்.
சிங்கார சிட்டு தான், ஏழு தலைமுறையில், வளர்த்த கடா முட்ட ஆகிய பாடல்கள் ரசிக்கத்தக்கவை. படத்தில் சிவாஜிகணேசன் காட்சிக்குக் காட்சி தத்ரூபமாக நடித்து கிளைமாக்ஸில் நம்மை அழ வைத்து விடுவார்.
படிக்காதவன்
ராஜசேகர் இயக்கத்தில் 1985ல் வெளியான படம் படிக்காதவன். சிவாஜியுடன் ரஜினியும் இணைந்து நடித்த படம். அம்பிகா, ஜெய்சங்கர், நாகேஷ், ரம்யா கிருஷ்ணன், டிஸ்கோ சாந்தி உள்பட பலர் நடித்துள்ளனர்.
இளையராஜாவின் இசையில் படம் பட்டையைக் கிளப்பியது. பாடல்களும் தாளம் போட வைத்தன. ஜோடிக்கிளி, ஊரத் தெரிஞ்சிக்கிட்டேன், ஒரு கூட்டு, ராஜாவுக்கு ராஜா, சொல்லி அடிப்பேனடி ஆகிய பாடல்கள் உள்ளன.
விடுதலை
ரஜினியுடன் அடுத்த ஆண்டே மீண்டும் இணைந்தார் சிவாஜி கணேசன். கே.விஜயனின் இயக்கத்தில் வெளியான படம் தான் விடுதலை. சந்திரபோஸ் இசை அமைத்துள்ளார். விஷ்ணுவர்த்தன், சுந்தரேசன், மகேந்திரன், பாலாஜி, மாதவி உள்பட பலர் நடித்துள்ளனர்.
ராஜாவே ராஜா…, தங்கமணி ரங்கமணி, நீலக்குயில்கள் ரெண்டு, நாட்டுக்குள்ள நம்மைப்பத்தி, ராகம் நானே தான் தாளம் ஆகிய பாடல்கள் உள்ளன.
கருடா சௌக்கியமா
கே.எஸ்.பிரகாஷ் ராவ் இயக்கத்தில் வெளியான படம். சிவாஜி, சுஜாதா, மோகன், தியாகராஜன் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்த படம். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்துள்ளார்.
சந்தன மலரின் சுந்தர வடிவில், மொட்டு விட்ட வாசனை, முத்து ரத்தின சித்திரம், கீதை சொல்ல கண்ணன் ஆகிய பாடல்கள் உள்ளன. சிவாஜியும் மோகனும் இணைந்து நடித்த ஒரே படம் இதுதான்.