உலக நடிகர்களே பார்த்து வியந்துபோன நடிகர் என்றால் அது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான். தொடக்கத்தில் நாடகத்தில் நடித்துக்கொண்டிருந்த “கணேசன்” சிவாஜி என்ற நாடகத்தில் மராட்டிய மன்னர் சிவாஜியாக நடித்ததில் இருந்து அவர் சிவாஜி கணேசன் என்று அழைக்கப்பட்டார்.
இந்த வரலாறு பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் சிவாஜி கணேசன் அறிமுகமாகிய “பராசக்தி” திரைப்படத்திற்கு வந்த சிக்கல் குறித்து தெரியுமா?

1952 ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதியின் திரைக்கதை வசனத்தில் வெளியான திரைப்படம் “பராசக்தி”. இத்திரைப்படத்தை ஏவிஎம் நிறுவனம் தயாரித்தது. இதில் சிவாஜி கணேசனுடன் பண்டரி பாய், எஸ் எஸ் ராஜேந்திரன், வி கே ராமசாமி என காலம் போற்றும் காவிய நடிகர்கள் எல்லாம் நடித்திருந்தனர்.
திராவிட இயக்கத்தினரின் புரட்சிகரமான சமூக நீதி கருத்துகளின் தாக்கத்தால் உருவான “பராசக்தி” திரைப்படம் மக்களின் மனதில் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. கலைஞர் கருணாநிதியின் வசனங்கள் அப்படிப்பட்டவை.

குறிப்பாக ஒரு கோவிலில் பூசாரி சிவாஜியின் தங்கையிடம் தவறாக நடக்க முயன்றதற்காக சிவாஜி அப்பூசாரியை பழி வாங்க அம்பாள் சிலைக்கு பின்னால் பதுங்கியிருப்பார். “நீ தீர்க்காயிசா இருப்ப” என ஒரு பக்தரை பூசாரி ஆசீர்வதிக்கும்போது, சிவாஜி கடவுள் சிலைக்கு பின்னால் இருந்து “முதலில் உன் ஜாதகத்தை கணித்துக்கொள் பூசாரி” என்பார்.
அதற்கு பூசாரி, “யார் பேசியது, அம்பாளா?” என்பார். அதற்கு சிவாஜி “அம்பாள் எந்த காலத்திலேயடா பேசினாள்” என கூறுவார். இந்த வசனம் பலரையும் சிந்திக்க வைத்தது. அதே போல்”பராசக்தி” திரைப்படத்தில் இடம்பெற்ற நீதிமன்ற காட்சி இப்போதும் மிகவும் பிரபலமானது.
“கோவிலிலே குழப்பம் விளைவித்தேன். கோவிலே கூடாது என்பதற்காக அல்ல, கோவில் கொடியவர்களின் கூடாரமாக ஆகிவிடக்கூடாது என்பதற்காக”
இந்த வசனம் பலரையும் உணர்ச்சி வசப்படுத்தியது. இவ்வாறு ஒரு புரட்சிகர திரைப்படமாக மக்களின் வரவேற்பை பெற்ற “பராசக்தி” திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என ஒரு கும்பல் கிளம்பியது. ஆம்!

“பராசக்தி” திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என அப்போது இருந்த தணிக்கை அதிகாரிக்கு தந்தி மேல் தந்தி வந்திருக்கிறது. அந்த நேரத்தில் இருந்த தணிக்கை குழுவின் தலைமை அதிகாரி “பராசக்தி” திரைப்படத்தை பார்த்துவிட்டு “பராசக்தியில் ஆட்சேபகரமான காட்சி எதுவும் இல்லை. ஆதலால் படத்திற்கு தடை விதிக்க வேண்டிய அவசியம் இல்லை” என தீர்ப்பு வழங்கியிருக்கிறார். மேலும் “பராசக்தி” திரைப்படத்தை சிறந்த திரைப்படம் என பாராட்டியும் இருக்கிறார்.
இதில் மற்றொரு சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால் “பராசக்தி” திரைப்படத்தை குறித்து நெகட்டிவ்வாக பல பத்திரிக்கைகள் எழுதியிருந்தன. ஆனால் அந்த நெகட்டிவ் விமர்சனங்கள் எல்லாம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது. இதனாலும் இத்திரைப்படம் பலே வெற்றி பெற்றது என்றும் கூறுகிறார்கள்.

சிவாஜி வாங்கிய சம்பளம்:
“பராசக்தி” திரைப்படத்திற்கு சிவாஜி சம்பளமே வாங்காமல் நடித்தார் என்றே சில கருத்துகள் பரவுகின்றன. ஆனால் உண்மை என்னவென்றால், சிவாஜி கணேசன் சம்பளமே வாங்காமல் கூட இத்திரைப்படத்தில் நடித்திருப்பேன் என ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். ஆனால் சிவாஜி கணேசன் இத்திரைப்படத்திற்காக வாங்கிய சம்பளம் ரூ. 250 என செய்திகள் தெரிவிக்கின்றன. நடிகர் திலகத்தை நமக்கெல்லாம் அறிமுகப்படுத்திய “பராசக்தி” திரைப்படத்திற்கு பின் இப்படி ஒரு சுவாரஸ்ய சம்பவமும் நிகழ்ந்திருக்கிறது.