தமிழின் முன்னணி குணச்சித்திர நடிகையாக திகழ்ந்து வருபவர் சரண்யா பொன்வண்ணன். தமிழ் சினிமாவில் அம்மா ரோல் என்றாலே முதலில் ஞாபகம் வருவது சரண்யாதான். அந்த அளவிற்கு ஒரு யதார்த்த அம்மாவாக சிறப்பாக நடித்து வருகிறார் சரண்யா.
குறிப்பாக “தென்மேற்கு பருவக்காற்று” திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு அம்மாவாக நடித்தது பலரையும் ரசிக்கவைத்தது. மேலும் இத்திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார்.

சரண்யா பொன்வண்ணன் தனது சினிமா வாழ்க்கையின் தொடக்க காலத்தில் “நாயகன்”, “என் ஜீவன் பாடுது”, “அஞ்சலி” போன்ற பல திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்துள்ளார். அதன் பிறகுதான் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடிக்க தொடங்கி தற்போது தமிழின் முக்கிய ‘அம்மா’ நடிகையாக திகழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட சரண்யா பொன்வண்ணன், “நாயகன்” திரைப்படத்தில் நடந்த ஒரு சுவாரஸ்ய சம்பவம் குறித்து பகிர்ந்துள்ளார்.

“மணிரத்னம் ஒரு காட்சியை மிகவும் பொறுமையாக எடுப்பார். ஆதலால் அந்த காட்சியை நடிப்பதில் ஒரு ஆழ்ந்த ஈடுபாடு வந்துவிடும். நாயகன் திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது ஒரு காட்சியில் கமல் எனக்கு தாலி கட்டுவார். அந்த காட்சியில் நான் நிஜமாகவே அழுக வேண்டும் என மணி ரத்னம் கூறினார். நான் சத்தமாக சிரித்துவிட்டேன். அதன் பின் மணி ரத்னம் நான் அழுகும் வரை காத்திருப்போம் என கூறினார்.
இதையும் படிங்க: “இனி உனக்கு பாட்டெழுத மாட்டேன்”… ஷங்கரின் முகத்துக்கு நேராகவே கொந்தளித்த வாலி… என்னவா இருக்கும்??

அவர் சும்மா பேச்சுக்கு சொல்கிறார் என்றுதான் நான் நினைத்தேன். ஆனால் படக்குழுவினர் நான் அழுவதற்காக வெகு நேரம் காத்திருந்தனர். எனக்கு வெகு நேரம் ஆகியும் அழுகையே வரவில்லை. என்ன செய்வது என தெரியவில்லை. நான் எப்படியும் அழுதுத்தான் ஆகவேண்டும் என கூறிவிட்டனர். அப்போது அழுகை வரவில்லை.

ஆனால் அதன் பின் நான் அமீரின் ராம் திரைப்படத்தில் நடித்தபோது உண்மையாகவே அழுக வேண்டும் என கூறினார்கள். அப்போது எனக்கு உடனே அழுகை வந்துவிட்டது. அன்று மணி ரத்னம் கூறியதை ராம் படப்பிடிப்பின்போது ஒப்பிட்டுப்பார்த்தபோது என்னுடைய வளர்ச்சியை என்னால் உணரமுடிந்தது” என அப்பேட்டியில் சரண்யா பொன்வண்ணன் தனது அனுபவத்தை குறித்து பேசியுள்ளார்.