Cinema History
“சூப்பர் கதை.. படம் ஹிட்”… ஸ்ரீதர் படத்துக்கு தப்பு கணக்கு போட்ட பஞ்சு அருணாச்சலம்… இப்படி ஆகிடுச்சே…
தமிழின் பழம்பெரும் கதாசிரியராக திகழ்ந்தவர் பஞ்சு அருணாச்சலம். இவர் “எங்கம்மா சபதம்”, “மயங்குகிறாள் ஒரு மாது”, “அன்னக்கிளி”, “கல்யாண ராமன்”, “ஆறிலிருந்து அறுபது வரை”, “சகலகலா வல்லவன்’, “அபூர்வ சகோதரர்கள்” போன்ற பல வெற்றித் திரைப்படங்களுக்கு கதாசிரியராக பணியாற்றியிருக்கிறார். மேலும் “மணமகளே வா”, “புதுப்பாட்டு”, “தம்பி பொண்டாட்டி”, “கலிகாலம்” போன்ற திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.
கண்ணதாசன்
தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பெற்ற கவிஞர் கண்ணதாசனை, அவ்வளவு எளிதாக நாம் மறந்துவிட முடியாது. இந்த உலகம் உள்ள வரை கண்ணதாசனின் புகழ் நிலைத்திருக்கும். அப்படிப்பட்ட கண்ணதாசனிடம் பஞ்சு அருணாச்சலம் உதவியாளராக இருந்தார். கண்ணதாசனும் பஞ்சு அருணாச்சலமும் கிட்டத்தட்ட நெருங்கிய உறவினர்கள்தான்.
ஸ்ரீதர்
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனராக திகழ்ந்த ஸ்ரீதர், “கல்யாண பரிசு”, “ஊட்டி வரை உறவு”, “வெண்ணிற ஆடை”, “காதலிக்க நேரமில்லை”, “இளமை ஊஞ்சலாடுகிறது” போன்ற பல கிளாசிக் திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்.
இதனிடையே கடந்த 1964 ஆம் ஆண்டு “கலைக் கோவில்” என்ற திரைப்படத்தை இயக்கினார் ஸ்ரீதர். இத்திரைப்படம் உருவாவதற்கு முன்பு கண்ணதாசனிடம் இத்திரைப்படத்தின் கதையை வந்து கூறினாராம்.
மார்க் போட்ட பஞ்சு அருணாச்சலம்
கண்ணதாசனிடம் இவ்வாறு பல இயக்குனர்கள் வந்து அவர்கள் இயக்கப்போகும் திரைப்படத்தின் கதைகளை கூறுவார்களாம். அப்போது கண்ணதாசனுக்கு உதவியாளராக இருந்த பஞ்சு அருணாச்சலத்திற்கு, அந்த கதைகளை எல்லாம் கேட்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
இதையும் படிங்க: “வள்ளி” படத்துக்கு மியூசிக் போட்டது கார்த்திக் ராஜாவா? இளையராஜாவா? குழப்பத்தை தீர்த்து வைத்த பிரபல தயாரிப்பாளர்…
ஒவ்வொருவரும் ஒரு கதை சொல்லும்போது “இந்த கதையை படமாக எடுத்தால் நன்றாக ஓடும், அந்த கதையை எடுத்தால் ஓடாது” என ஒவ்வொரு கதைக்கும் தனது மனதுக்குள் மார்க் போட்டுக்கொள்வாராம். அத்திரைப்படங்கள் வெளியான பின்பு, பஞ்சு அருணாச்சலம் கணித்தது போலவே அந்த திரைப்படங்களின் முடிவு இருக்குமாம். இவர் தோல்வியடைந்துவிடும் என்று நினைக்கும் படங்கள் தோல்வியடைந்துவிடுமாம். இது நிச்சயம் ஓடும் என்று நினைக்கும் திரைப்படங்கள் வெற்றி அடைந்துவிடுமாம். இவ்வாறு தன்னுடைய கணிப்பில் தொடர்ந்து வெற்றி கண்டுகொண்டிருந்தாராம். ஆனால் அது ஸ்ரீதரின் விஷயத்தில் நடக்கவில்லை.
தப்பான கணிப்பு
ஸ்ரீதர் “கலைக் கோவில்” திரைப்படத்தின் கதையை கூறியபோது, பஞ்சு அருணாச்சலத்திற்கு மிகவும் பிடித்துப்போனதாம். இந்த கதை படமாக வந்தால் நிச்சயம் வெற்றிபெறும் என நினைத்தாராம்.
ஆனால் “கலைக் கோவில்” திரைப்படம் வெளியாகி படு தோல்வியை கண்டது. “நமது கணிப்பு தவறாக போய்விட்டதே, அப்படி அந்த படத்தில் என்ன தவறு நேர்ந்தது” என அத்திரைப்படத்தை சென்று பார்த்தாராம்.
ஸ்ரீதர் கதை சொன்னபோது மிகவும் நன்றாக இருந்தது, ஆனால் படமாக பார்க்கும்போது அத்திரைப்படம் அவரை ஈர்க்கவில்லையாம். மேலும் அத்திரைப்படத்தின் கதாநாயகனான முத்துராமனை வில்லன் போலவும், அவரது தந்தை கதாப்பாத்திரத்தை கதாநாயகன் போலவும் காட்சிப்படுத்தி இருந்ததுதான் இந்த படத்தின் பிரச்சனை என உணர்ந்துகொண்டாராம்.