Cinema News
இப்படி ஒரு பிரியாணி என் வாழ்க்கைல சாப்டதே கிடையாது… சூர்யா புகழ்ந்த அந்த பிரபலம்…
கோலிவுட் நடிகராக இருந்தாலும் டோலிவுட்டில் நடிகர் சூர்யாவுக்கென தனி மார்க்கெட் இருக்கிறது. ஆந்திரா, தெலங்கானாவில் அவருக்கான ரசிகர்கள் கூட்டமும் அதிகம். சூரரைப் போற்று படத்தின் தெலுங்குப் பதிப்பும் சரி, ஜெய்பீம் படமும் சரி, தமிழகத்தைப் போலவே தெலுங்கு மக்கள் மத்தியிலும் பிரபலமான படங்கள். தொடர்ச்சியான படங்களில் சூர்யா நடித்து வரும் நிலையில், தெலுங்கிலும் அவர் படங்களை வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
அப்படி ஒருமுறை படப்பிடிப்புக்காக ஆந்திரா சென்றிருந்தபோது, நடிகர் பிரபாஸின் உபசரிப்பு தனக்கு வியப்பளித்ததாக சூர்யா ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார். இதுகுறித்து சூர்யா பேசுகையில், `நான் ஹைதராபாத் வந்திருப்பதைக் கேள்விப்பட்டு இரவு உணவுக்கு வர வேண்டும் என தனது வீட்டுக்கு பிரபாஸ் அழைப்பு விடுத்தார்.
நானும் ஒப்புக்கொண்டேன். குறிப்பிட்ட நாளில் எனது ஷூட்டிங் தொடங்க இரண்டு மணி நேரம் தாமதமானது. மாலை 6 மணிக்குத் தொடங்க வேண்டிய ஷூட்டிங் எதிர்பாராதவிதமாக இரண்டு மணி நேரம் தாமதமாக இரவு 8 மணிக்கே தொடங்கியது.
இதையும் படிங்க: கோமாளி இயக்குனருக்கு இரண்டு முறை ‘நோ’ சொன்ன எஸ்.ஜே.சூர்யா… என்னவா இருக்கும்??
அதன்பிறகு இரவு 11.30 மணி வரை படப்பிடிப்பு நீண்டது. இதனால், பிரபாஸின் வீட்டுக்கு இன்னொரு நாள் செல்லலாம் என்று முடிவெடுத்தேன். மேலும், அவருக்கு போன் செய்து மன்னிப்பும் கேட்டுக்கொள்ளலாம் என்று நினைத்துக்கொண்டேன். இன்றைக்கு நமக்கு ஹோட்டல் சாப்பாடுதான் என்று நினைத்துக் கொண்டே நான் தங்கியிருந்த ஹோட்டலுக்குத் திரும்பினேன். வந்து பார்த்த எனக்கு மிகப்பெரிய ஆச்சர்யம். காரணம் எனக்காக ஹோட்டல் வாசலில் பிரபாஸ் காத்துக் கொண்டிருந்தார்.
குறிப்பாக இரவு உணவு எடுத்துக் கொள்ளாமல் எனக்காக அவர் காத்திருந்தது எனக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்திவிட்டது. அத்தோடு, தனது தாயார் தயார் செய்திருந்த பிரியாணியையும் எடுத்து வந்து எனக்குப் பரிமாறினார் பிரபாஸ். அதுவரை அவ்வளவு ருசியான வீட்டில் தயாரிக்கப்பட்ட பிரியாணியை நான் சாப்பிட்டதே இல்லை. அதைவிட பிரபாஸின் உபசரிப்பும் விருந்தோம்பலும் நெகிழ்வை ஏற்படுத்தியது’ என்று சூர்யா வெகுவாகப் பாராட்டியிருக்கிறார்.
பாகுபலி படம் மூலம் தேசிய அளவில் முன்னணி ஹீரோவாக உயர்ந்த பிரபாஸூக்கு, அடுத்தடுத்து சாஹோ, ராதே ஷ்யாம் படங்கள் எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை. அவர் இப்போது, கே.ஜி.எஃப் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கிவரும் சலார், ஓம் பிரகாஷின் ஆதிபுருஷ் மற்றும் நாக் அஸ்வினின் புராஜக்ட் கே, இயக்குநர் மாருதியின் ராஜா டீலக்ஸ் உள்ளிட்ட படங்களிலும் நடிக்க இருக்கிறார். இந்தப் படங்கள் அவருக்குக் கைகொடுக்கும் என்று நம்புவோம்.