நடிகையின் வயதை பாடலில் சொன்ன கண்ணதாசன்!.. கவிஞருக்கு குசும்பு அதிகம்தான்!…

Published on: April 19, 2023
kannadasn
---Advertisement---

கருப்பு வெள்ளை காலம் முதல் கலர் சினிமா வரை பல திரைப்படங்களுக்கும் பாடல்களை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன். காதல், தத்துவம், சோகம், நம்பிக்கை, விரக்தி, அழுகை, உற்சாகம், ஏமாற்றம் என தமிழ் சினிமாவில் வந்த பல சூழ்நிலைகளுக்கும் கண்ணதாசன் பாடல் எழுதியுள்ளார். எம்.ஜி.ஆர், சிவாஜி மட்டுமில்லாமல் பல நடிகர்களுக்கும் இவர் பாடல் எழுதியுள்ளார். ஆனால், எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகியோருக்கு இவர் எழுதிய பல பாட்கள் காலத்தையும் தாண்டி மக்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.

கண்ணதாசன் தன் சொந்த வாழ்வில் நடக்கும் பல விஷயங்களையும் பாடல் வரிகளில் புகுத்திவிடுவார். யார் மீது கோபம் இருந்தால் கூட அந்த பாட்டில் காட்டிவிடுவார். அல்லது, அன்று யாராவது சொன்ன விஷயத்தையே முதல் வரியாக்கி பாடலை எழுதிவிடுவார்.

அன்னை இல்லம் படத்தில் இடம் பெற்ற பாடல் எண்ணிரண்டு பதினாறு வயது. இந்த பாடலை கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார். கே.வி.மகேதேவன் இசையில் மனதை மயக்கும் மெலடியாக இந்த பாடல் அமைந்தது. இந்த படத்தில் சிவாஜியும், தேவிகாவும் நடித்திருந்தனர். தேவிகாவை மனதில் நினைத்து கடற்கரையில் சிவாஜி பாடுவது போல இந்த பாடலை எடுத்திருப்பார்கள்.

இந்த பாடல் வரிகளை கேட்ட அப்படத்தின் இயக்குனரும், தயாரிப்பாளரும் ‘ஏன் கவிஞரே.. தேவிகாவை பார்த்தால் பதினாறு வயது போலவா தெரிகிறது?’ எனக்கேட்டு சிரித்தார்களாம். அதற்கு பதில் சொன்ன கண்ணதாசன் ‘நான் எங்கே அப்படி சொல்லியிருக்கிறேன். பாடல் வரிகளை நன்றாக படித்து பாருங்கள். எண் இரண்டு பதினாறு.. அதாவது இரண்டு பதினாறு சேர்ந்து 32 வயது என்றுதான் சொல்லியிருக்கிறேன்’ என்றாராம். அதைகேட்டு இயக்குனரும், தயாரிப்பாளரும் அசந்து போனார்களாம். அப்போது நடிகைகளெல்லாம் 30 வயதுக்கு மேல் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.