தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகராக திகழ்ந்த ஜெய்சங்கர் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் ஆகியோர் கொடிகட்டிப் பறந்த காலகட்டத்தில் தனது வசீகரமான நடிப்பால் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கிக்கொண்டவர். ஜெய்சங்கர், தொடக்கத்தில் நாடக சபாவில் நடிகராக இருந்தார். அதனை தொடர்ந்து சினிமா வாய்ப்புக்காக அலைந்துகொண்டிருந்தார். ஆனால் அவரது கண்கள் சிறியதாக இருந்ததால் அவருக்கு பல தயாரிப்பாளர்கள் வாய்ப்பு தர மறுத்தார்கள்.

எனினும் அதே சிறிய கண்கள் காரணமாக அவருக்கு ஒரு படத்தில் கதாநாயகனாக வாய்ப்பு கிடைத்தது. அத்திரைப்படம்தான் “இரவும் பகலும்”. இத்திரைப்படத்திற்கு பிறகு பல திரைப்படங்களில் நடித்த ஜெய்சங்கர், மிகப் பிரபலமான நடிகராக உருவானார். மேலும் எம்.ஜி.ஆரை போல் ஒரு கொடை வள்ளலாக திகழ்ந்தார். ஆனால் அவர் தன்னை கொடை வள்ளலாக விளம்பரப்படுத்திக்கொள்ளவில்லை.
இந்த நிலையில் ஜெய்சங்கர் குறித்து ஒரு சுவாரஸ்ய தகவல் தற்போது வெளிவந்துள்ளது. அதாவது அவர் ஒரு முறை தனது கார் டிரைவரை தயாரிப்பாளராக ஆக்கினாராம். அக்காலகட்டத்தில் சினிமாவில் தயாரிப்பாளர் ஆகவேண்டும் என்றால், யாராவது பெரிய நடிகரின் ஒப்புதல் இருந்தாலே போதுமானது. அவர் கால்ஷீட் கொடுத்தால் ஃபைனான்சியர்கள் பணம் கொடுக்க முன் வந்துவிடுவார்கள். அவ்வாறு தனது டிரைவரின் பெயரை போட்டு அவரது தயாரிப்பில் ஜெய்சங்கர் நடிக்கவுள்ளதாக அறிவித்தார். அதன் பின் டிரைவருக்கு ஃபைனான்சியர்கள் வந்து பணம் தந்தார்கள். அதன் பின் ஜெய்சங்கரை வைத்து படம் தயாரித்த அந்த டிரைவர் நன்றாக சம்பாதித்தாராம்.

எனினும் ஜெய்சங்கர் அவரை தயாரிப்பாளராக ஆக்கலாம் என்று முடிவு செய்தபோதே அவரிடம் ஒரு கண்டிஷன் போட்டாராம். அதாவது “இத்திரைப்படத்தின் மூலம் வரும் வருமானத்தை கொண்டு இன்னொரு படத்தை தயாரிக்கக்கூடாது. அந்த பணத்தை வைத்து வீடு வாங்கி வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடவேண்டும். மீண்டும் டிரைவர் வேலைக்கு வந்துவிடவேண்டும்” என்று கண்டிஷன் போட்டுவிட்டாராம். இதே கண்டிஷனோடு தனது மேக்கப் மேன், டச் அப் பாய் ஆகியோரையும் தயாரிப்பாளராக ஆக்கியுள்ளாராம் ஜெய்சங்கர்.
இதையும் படிங்க: இளையராஜா நினைச்சிருந்தா அப்பாவ காப்பாத்திருக்க முடியும்!.. மலேசிய வாசுதேவன் மரணம் குறித்து மகன் பகீர் தகவல்..
