Cinema History
ஒரு படத்தில் 5 சாதனைகள் ; யாரும் செய்யாததை செய்து காட்டிய நடிகர் திலகம்…
நாடகங்களில் நடித்து அதிலேயே சிறந்த நடிகர் என பெயர் வாங்கி சினிமாவில் நுழைந்தவர் சிவாஜி கணேசன். நாடகத்தில் பயிற்சி எடுத்தவர் என்பதால் முதல் படமான ‘பாராசக்தி’யிலேயே அசத்தலாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். அதன்பின் செண்டிமெண்ட் கலந்த கதைகளில் நடித்து நடிகர் திலகமாக மாறினார். சோக காட்சிகளில் நடிக்க இவரை விட்டால் ஆளில்லை என சொல்லும் அளவுக்கு நடிப்பில் நவரசத்தையும் காட்டியவர். இவர் ஏற்காத வேடங்களே இல்லை என சொல்லும் அளவுக்கு நடிப்பில் பல பரிமாணங்களை காட்டியவர்.
மேடை நாடகமாக இருந்து சினிமாவில் எடுக்கப்பட்ட கதைதான் தங்கப்பதக்கம். பி.மாதவன் இயக்கத்தில் சிவாஜி நடித்து 1974ம் வருடம் வெளியான திரைப்படம் தங்கப்பதக்கம். நேர்மையான, கண்டிப்பான போலீஸ் அதிகாரியாக எஸ்.பி.சவுத்ரி என்கிற வேடத்தில் சிவாஜி நடித்திருப்பார். சட்டமே முக்கியம் எனக்கருதி தனது சொந்த மகனையை சுட்டுக்கொள்வார். இந்த படம் ரசிகர்களை கவர்ந்து பெரிய ஹிட் அடித்தது.
இந்த படம் பல சாதனை செய்தது பலருக்கும் தெரியாது. 1974ம் வருடங்கள் ரிலீஸ் ஆன படங்களில் இந்த படம் மட்டுமே 175 நாட்கள் ஓடி வெள்ளிவிழா கண்டது. அதேபோல், அந்த வருடம் அதிக வசூல் செய்த படமாகும் தங்கப்பதக்கம் இருந்தது. மேலும், இந்த முந்தைய வருடம் அதாவது 1973ம் வருடம் வெளியான அனைத்து படங்களின் வசூலையும் தங்கப்பதக்கம் முறியடித்தது. சென்னை சாந்தி தியேட்டரில் தொடர்ந்து 103 நாட்கள் ஹவுஸ்புல்லாக ஓடியது. மேலும், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் இப்படம் ரீமேக் செய்யப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் ஒரு படம் இத்தனை சாதனைகளை படைத்தது எனில் அது தங்கப்பதக்கம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.