Connect with us

throwback stories

எம்ஜிஆரை டார்கெட் பண்ண திமுகவினர்.. பதிலடி கொடுக்க கண்ணாதாசனை பயன்படுத்திய புரட்சித் தலைவர்!

அறிஞர் அண்ணா உருவாக்கிய திராவிடர் முன்னேற்றக்  கழகத்தில் இணைந்து செயல்பட்டு வந்த நடிகர் எம்ஜிஆர் சினிமாவிலும், கட்சியிலும் மிகப்பெரிய புகழை அடைந்திருந்தார். அவரது வளர்ச்சி பிடிக்காமல் திமுகவில் இருந்த சிலர், எம்ஜிஆரை எப்படியாவது கட்சியை விட்டு நீக்க துடித்துக் கொண்டிருந்தனர்.

கோயிலுக்குச் சென்று சாமி கும்பிட்டதன் காரணமாக சிவாஜியையும் திமுகவில் இருந்து நீக்கினர். அதை போலவே எம்ஜிஆரையும் திமுகவில் இருந்து நீக்குவதற்கான வேலைகள் நடந்து கொண்டிருந்தன.

கடவுள் மறுப்புக் கொள்கையை உறுதியுடன் செயல்படுத்திக் கொண்டிருந்த திமுகவினர் மத்தியில் மூகாம்பிகை தேவியை தனது தாயாகவே எண்ணி வணங்கி வந்தார் எம்ஜிஆர். அவருக்கு பரிசாக கொடுக்கப்பட்ட தங்க வாள் ஒன்றையும் மூகாம்பிகை கோயிலுக்கே தானமாக வழங்கினார்.

மேலும், சின்னப் தேவர் உடன் நல்ல நட்புக் கொண்டிருந்த எம்ஜிஆர் அவரது வேண்டுகோளுக்கு இணங்க மருதமலை முருகன் கோயிலுக்கு மின் விளக்கு வசதிகளை செய்துக் கொடுத்தார். எம்ஜிஆர் தான் அந்த புணரமைக்கப்பட்ட ஆலயத்தை ஒரு விழா நடத்தி திறந்து வைக்க வேண்டும் என தேவர் ஆசைப்பட எம்ஜிஆரும் அவரது ஆசையை நிறைவேற்றினார்.

ஒரு சமயம் கிருபானந்த வாரியர் பேசிய ஆன்மிக பேச்சு சர்ச்சையை கிளப்பிய பெரிய பஞ்சாயத்தாக செல்ல அதிலும், தலையிட்டு எம்ஜிஆர் அவரை காப்பாற்றி உள்ளார். வேலூர் அருகே உள்ள கோயிலுக்கு மூலவர் சிலை வைக்கும் பஞ்சாயத்தையும் எம்ஜிஆர் தலைமை ஏற்று தீர்த்து வைத்துள்ளார்.

இப்படி ஆன்மிகவாதியாக இருந்து வந்த எம்ஜிஆர் செய்யும் செயல்கள் கொஞ்சம் கூட பிடிக்காத திமுகவினர் எப்படியாவது அவரை கட்சியில் இருந்தே வெளியேற்றி விட வேண்டும் என சதித்திட்டங்களை தீட்டி வந்தனர்.

அதுபற்றி தெரிந்ததும் பணத்தோட்டம் படத்தின் படப்பிடிப்பில் மிகவும் கவலையாக எம்ஜிஆர் அமர்ந்திருந்தார். இயக்குநர் சங்கர் வந்து படத்தின் காட்சி ஒன்றை விவரிக்கிறார். அந்த காட்சி என்னவென்றால், எல்லா குற்றங்களும் எம்ஜிஆர் மீது விழுகிறது. தனது தாய் மற்றும் காதலி நம்பாமல் இருந்தால் போதும் என நினைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் கடைசியில், அவர்களும் எம்ஜிஆரை நம்ப மறுக்கும் சூழல் உருவாகிறது, அந்த சிச்சுவேஷனுக்கு தகுந்த பாடலை எழுத கவிஞரிடம் சொல்லிவிட்டு இயக்குநர் வெளியே செல்கிறார்.

கவலையான முகத்துடன் வந்ததில் இருந்தே அமைதியாக இருக்கும் எம்ஜிஆரை பார்த்து கண்ணதாசன் என்ன பிரச்சனை எனக் கேட்க, கட்சியின் பிரச்சனைகளை சொல்லி விட்டு, இந்த படத்தின் காட்சி போலத்தான் என் நிலைமையும் இரண்டையும் கனெக்ட் செய்து கட்சியினருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஒரு பாடலை உருவாக்க முடியுமா என எம்ஜிஆர் கேட்க, அப்படி உருவான பாடல் தான் “என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே.. இருட்டினில் நீதி மறையட்டுமே.. தன்னாலே வெளிவரும் தயங்காதே.. ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே” என்கிற சூப்பர் ஹிட்டான பாடல்.

அந்த பாடலில் முன்னாடி தெரிவது அரிச்சுவடு, பின்னாடி இருப்பது அவன் வீடு என்கிற வரிகளில் சரியாக திரையில் கோயிலையும் காட்டியிருப்பார் இயக்குநர். அந்த பாடல் பட்டித் தொட்டி எங்கும் ஹிட்டாக எம்ஜிஆர் கட்சியினருக்கு பதிலடி கொடுக்கவே இப்படியொரு பாடலை வைத்திருக்கிறார் என்கிற தகவல் அண்ணா வரை செல்ல, கட்சியில் பிரச்சனை செய்பவர்களை அழைத்து இனிமேல் இந்த பிரச்சனையை பெரிதுபடுத்தக் கூடாது என கண்டித்ததாக சில கதைகள் கூறப்படுகின்றன.

author avatar
Saranya M
Continue Reading

More in throwback stories

To Top