Cinema History
எம்.எஸ்.வி போட்ட டியூனுக்கு கண்ணதாசன் சிரமப்பட்டு எழுதிய பாடல்… விடிய விடிய விழித்த பாலசந்தர்
பாலச்சந்தர் இயக்கிய படம் ஒன்றுக்காக தயாரிப்பாளர் இராம அரங்கண்ணல் அலுவலகத்தில் நடந்த ஒரு சம்பவம். கண்ணதாசனுக்கு பாடலுக்கான சூழல் சொல்லப்படுகிறது. அவரால் அதற்கேற்ப எழுதுவதற்கு முடியவில்லை. என்ன காரணம் என்று பார்ப்போமா…
அண்ணன் தங்கையைத் திட்டுகிறான். சித்தர் பாடல் போல வரவேண்டும் என பாலச்சந்தர் சொல்கிறார். எம்எஸ்.விஸ்வநாதன் டியூன் போடுகிறார். ஆனால் முதல் 2 நாள்கள் வந்து பாடலை எழுத முடியாமல் மிகவும் சிரமப்பட்டாராம் கண்ணதாசன். 3வது நாள், கண்ணதாசன் எம்எஸ்.வி.யிடம் என்னய்யா டியூன் போட்டுருக்க? அண்ணன் தங்கையைத் திட்டற மாதிரி பாட்டெழுத சொல்றாங்க. நீ மெலடி டியூன் போட்டுருக்க. டியூனை மாத்துய்யான்னு சொல்றாரு. ஆனா எம்எஸ்வி. மாற்றவில்லை.
அப்போதும் கண்ணதாசனால் பாடல் எழுதமுடியவில்லை. உடனே எம்எஸ்வி. எழுந்து அலுவலகக் காரில் சென்று விடுகிறார். அடுத்ததாக கண்ணதாசனை அழைத்துச் செல்ல வேண்டும். அப்போது மழை பெய்கிறது. உடனே தயாரிப்பாளர் இராம.அரங்கண்ணலைப் பார்த்து தனக்குப் பிடித்த சிலவற்றை வாங்கி வரச் சொல்கிறார்.
அதற்கு ‘யோவ் மூணு நாளா பாட்டு எழுத முடியல. உனக்கு இதெல்லாம் வேணுமா? இந்த மழைக்கு என் ஆபீஸாவது ஒதுங்க இருக்கேன்னு நினைச்சுக்க’ என சொல்கிறார். உடனே ‘உன் ஆபீஸ் இல்லன்னா என்னய்யா… எனக்கு ஒதுங்க வேற இடம் இல்லையா? தெய்வம் தந்த வீடு… தெரு இருக்கு’… சொல்லிய கண்ணதாசனுக்கு பொறி தட்டியது. ‘யோவ் அந்த டியூன் என்னய்யா… தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு… இதான்யா பல்லவி’..
‘விசுவை வரச்சொல்லுய்யா’ என்கிறார் கண்ணதாசன். மறுபடியும் எம்எஸ்.வி. வந்ததும் அருவியாக வந்து விழுகிறது கண்ணதாசனின் வார்த்தைகள். அன்று இரவு முழுவதும் விழித்து அதிலிருந்து 4 சரணங்களை எடுப்பதற்குள் படாதபாடு பட்டுவிட்டேன் என்று பாலசந்தர் சொல்கிறார். இந்தப் பாடல் இடம்பெற்ற படம் அவள் ஒரு தொடர்கதை.
மேற்கண்ட தகவலை பிரபல பேச்சாளரும், கவிஞருமான நெல்லை ஜெயந்தா ஓசூரில் நடைபெற்ற புத்தகத்திருவிழாவின் போது தெரிவித்தார்.