Cinema History
இதுதான் கேப்புல கெடா வெட்றதா?!. சிவாஜி படத்தில் தன்னை பற்றி பாடல்களை எழுதிய கண்ணதாசன்!..
கவிஞர் கண்ணதாசனுக்கு ஒரு பழக்கம் உண்டு. தனது சொந்த பிரச்சனையை கூட பாடல் வரிகளில் பிரதிபலித்து விடுவார். திரைப்படத்தில் கதாநாயகன் சந்திக்கும் ஒரு பிரச்சனையை தனது பிரச்சனையோடு முடிச்சு போட்டு பாடல் வரிகளை எழுதிவிடுவார். அதேபோல், அருகில் இருப்பவர்கள் சொல்லும் ஒரு வார்த்தையில் இருந்தும் பல்லவிகளை எழுதி விடுவார்.
காமராஜரிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவருடன் இருந்த உறவு முறிந்துபோனது. அதன்பின் அவரிடம் மீண்டும் பேச நினைத்த கண்ணதாசன் ஒரு படத்தில் ‘அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி. என்னை சேரும் நாள் பார்க்க சொல்லடி’ என எழுதி இருந்தார். காமராஜரின் அம்மா பெயர் சிவகாமி என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சித்தர் மனநிலையில் கண்ணதாசன் எழுதிய அற்புத வரிகள்!.. எம்.ஜி.ஆருக்கு ஒரு தத்துவ பாடல்!..
ஒருமுறை வெளிநாட்டு மதுபானத்திற்கு ஆசைப்பட்டார். அப்போது ஒரு படத்தில் பாடல் எழுதப்போனார். ‘அந்த சரக்கு இருந்தால்தான் பாடல் வரிகள் வரும்’ என கவிஞர் சொல்ல தயாரிப்பாளரோ கையை விரித்துவிட்டார். உடனே தனது அண்ணனிடம் பணம் கேட்டு ஆள் அனுப்பினார். அவரும் கொடுக்க முடியாது என கையை விரித்துவிட கண்ணதாசன் எழுதிய பாடல்தான் ‘அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே… ஆசைக்கொள்வதில் அர்த்தம் ஏதடா காசில்லாதவன் குடும்பத்திலே’.
இப்படி கவிஞரின் வாழ்க்கையில் பல உதாரணங்களை சொல்ல முடியும். காதல், தத்துவம், சோகம், மரணம், கண்ணீர் என எல்லாவற்றையும் பாடி இருக்கிறார் கண்ணதாசன். ஆனால், தன்னை பற்றி தானே பாடல் வரிகளை எழுதிக்கொண்ட சம்பவம் பற்றித்தான் இங்கே பார்க்க போகிறோம்.
இதையும் படிங்க: அந்த பாட்டை கண்ணதாசன் தான் எழுத வேண்டும்… அடம் பிடித்த எம்ஜிஆர்.. அதிர்ந்த படக்குழு…
ஒருநாள் இரவு சிவாஜி நடிப்பில் உருவான வசந்த மாளிகை படத்தில் தான் எழுதிய ‘கலைமகள் கைப்பொருளே உன்னை கவனிக்க ஆள் இல்லையோ’ பாடலை கண்ணதாசன் திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டிருந்தார். அதைப்பார்த்த அவரின் மகன் அண்ணாதுரை ‘இந்த பாடலில் அப்படி என்ன விசேஷம்? அடிக்கடி இந்த பாடலை கேட்கிறீர்கள்?’ என கேட்டார்.
அதற்கு சிரித்தபடி பதில் சொன்ன கண்ணதாசன் ‘அது என்னைப்பற்றி நானே எழுதிக்கொண்டது. அதனால்தான் திரும்ப திரும்ப கேட்டுகொண்டிருக்கிறேன். அதேபோல், அதேபடத்தில் இடம் பெற்ற ‘இரண்டு மனம் வேண்டும்.. இறைவனிடம் கேட்டேன்’ என்கிற பாடலும் என்னைப்பற்றி நானே எழுதியதுதான்’ என சொன்னார் கண்ணதாசன்.