
106 ஆண்டுகள் பழமை வாய்ந்த ரிப்பன் பில்டிங்கில் முதல் தளத்திலிருந்து இரண்டாம் தளம் வரை விரிசல் விழுந்துள்ள நிலையில் அதை சரி செய்யும் பணிகள் இன்னும் தொடங்கப்படாமல் உள்ளன.
சென்னையின் புராதனமான கட்டிடங்களில் ரிப்பன் பில்டிங்கும் ஒன்று. அந்த கட்டிடத்தில்தான் மாநகர ஆணையர் மற்றும் துணை ஆணையர்களின் அலுவலகம் அமைந்துள்ளது. சென்னையின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த கட்டிடத்தின் வயது 106 ஆண்டுகளாகும். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தின்போது சென்னை விரிவாக்கத்தை அடுத்து இந்த கட்டிடம் ரூபாய் 7.5 லட்சம் செலவில் கட்டப்பட்டது.
இந்நிலையில் இந்த கட்டிடத்தின் முதல் தளத்தில் இருந்து இரண்டாம் தளம் வரை விரிசல் விழுந்துள்ளது கவனிக்கப்படாமல் இருந்து வருகிறது. இதன் அருகில் மெட்ரோ ரயிலுக்கான பாதை அமைக்கும் பணிகள் ஆரம்பித்ததில் இருந்துதான் இந்த விரிசல் விழுந்துள்ளதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். நாளுக்கு நாள் விரிசல் அதிகமான வண்ணம் உள்ளதால் அதை சரி செய்யும் பணிகள் உடனடியாக தொடங்கப்பட வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.



