Cinema News
கடனை அடைச்சாலும் பஞ்சாயத்து தீராது போல!.. சிவகார்த்திகேயனால் கொட்டுக்காளிக்கு வந்த ஏழரை..
சிவகார்த்திகேயனின் கடன் பிரச்சனை கொட்டுக்காளிக்கு தலைவலியாக மாறியுள்ளது.
சினிமா என்பது கோடிகளில் புரளும் ஒரு தொழில். ஒரு படம் நல்ல லாபம் எனில் தயாரிப்பாளர், வினியோகஸ்தர் மற்றும் தியேட்டர் அதிபர்கள் என எல்லோருக்கும் லாபம் வரும். அனைவரும் சந்தோஷப்படுவார்கள். இதுவே நஷ்டம் எனில் தயாரிப்பாளருக்கே பிரச்சனை. மொத்த நஷ்டமும் அவருக்கே போகும்.
நஷ்டம் எனில் படத்தை வாங்கிய வினியோகஸ்தர்களுக்கு அதை தயாரிப்பாளரிடம் வாங்குவதில் குறியாக இருப்பார்கள். அதேபோல், தயாரிப்பாளர் அந்த நஷ்டத்தை உடனே கொடுக்க மாட்டார். ‘அடுத்து எடுக்கும் படத்தை உங்களுக்கே கொடுக்கிறேன். அதில் லாபம் வரும்’ என சொல்வார். இதுதன் காலம் காலமாக இருக்கும் நடைமுறை.
தமிழ் சினிமா நடிகர்களில் தயாரிப்பில் இறங்கி 100 கோடி வரை கடனாளி ஆனது சிவகார்த்திகேயன் மட்டுமே. துவக்கத்திலேயே அகலக் கால் வைத்தார். சில படங்கள் வசூலில் சறுக்க கடனாளியாக மாறினார். இதனால், அவரின் ஒவ்வொரு படம் ரிலீஸாகும்போதும் பஞ்சாயத்து நடந்தது. சம்பளத்தை விட்டுக் கொடுத்தோ, அல்லது கடன் வாங்கி அதை கொடுத்தே அப்போதைக்கு பிரச்சனையை தீர்த்துவிட்டு படத்தை ரிலீஸ் செய்வார்.
அல்லது ஒரு தயாரிப்பாளிடம் உங்களுக்கு கால்ஷீட் கொடுக்கிறேன் என சொல்லி பணத்தை வாங்கி கடனை அடைப்பார். அதன்பின் வாங்கிய கடனுக்காக அந்த தயாரிப்பாளருக்கு சம்பளமே இல்லாமல் படம் நடிப்பார். கடைசியாக வெளியான அயலான் படத்திற்கு கூட சிவகார்த்திகேயன் சம்பளம் வாங்கவில்லை.
அயலான் படத்தோடு தனது 100 கோடி கடன் முழுவதையும் அடைத்துவிட்டு நிம்மதி அடைந்தார். ஆனால், அயலான் படம் சரியாக ஓடவில்லை. இப்படத்தை வாங்கி வெளியிட்ட வினியோகஸ்தர்களுக்கு நஷ்டம் ஆனது. அதோடு, ஜி.எஸ்.டி தொகை 8 கோடி வரை சிவகார்த்திகேயன் கொடுக்க வேண்டி இருக்கிறது. வினியோகஸ்தர்கள் சங்கம் பல முறை கேட்டும் சிவகார்த்திகேயன் கண்டுகொள்ளவில்லை. இப்போது சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் உருவாகி வருகிற 23ம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம்தான் கொட்டுக்காளி.
சூரி முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படம் சர்வதேச அளவில் விருதுகளை பெற்றிருக்கிறது. எனவே, இப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால், அந்த 8 கோடியை சிவகார்த்திகேயன் கொடுத்தால் மட்டுமே கொட்டுக்காளி படத்தை ரிலீஸ் செய்ய அனுமதிப்போம் என வினியோகஸ்தர்கள் சங்கம் போர்க்கொடி தூக்கி இருக்கிறது.
கடனை எல்லாம் அடைச்சிட்டாலும் சிவகார்த்திகேயனை நஷ்ட கணக்கு இன்னமும் துரத்திக்கொண்டே இருக்கிறது. இதை எப்படி அவர் சமாளிக்க போகிறார் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.