விஷம் குடிப்பது போல நாடகம் – உள்ளாட்சி தேர்தல் வேட்பாளரின் குட்டு உடைந்தது

Published On: December 25, 2019
---Advertisement---

77e4698837f966dd54bd5cb9ec2a2966

மலைநாடு எனும் பகுதியைச் சேர்ந்த உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர் மக்களிடம் அனுதாப ஓட்டுகளைப் பெறுவதற்காக தன்னை யாரோ கடத்தி விஷம் கொடுத்து கொலை செய்ய முயன்றதாக நாடகம் ஆடியுள்ளார்.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடக்க இருக்கிறது. இந்நிலையில் மலைநாடு பகுதியைச் சேர்ந்த கோவில் எனும் மலையக கிராமமொன்றில் மாவட்ட கவுன்சிலருக்கு போட்டியிடும் அண்ணாமலை என்ற வேட்பாளர் நூதனமான முறையில் மக்களிடம் வாக்குகளை பெற திட்டமிட்டு, அதற்காக ஒரு நாடகம் ஆடியுள்ளார்.

அண்ணாமலை திமுகவை சேர்ந்த மாவட்ட கவுன்சிலர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால் அந்த பகுதியில் அவருக்கு போதுமான வரவேற்பு இல்லாமல் இருந்துள்ளதாக தெரிகிறது. இதனால் மக்களிடம் அனுதாப ஓட்டுகளை பெற ஒரு திட்டம் தீட்டி உள்ளார். யாருக்கும் தெரியாமல் தலைமறைவாக ஒரு இடத்தில் சென்று மறைந்து கொண்ட அவர் தனது உறவினர் ஒருவருக்கு அலைபேசியில் அழைத்து யாரோ தன்னை கடத்தி வந்து தன் வாயில் விஷத்தை ஊற்றி கொல்ல முயல்வதாக’ கூறியுள்ளார். இதனையடுத்து அவர்கள் பதற்றத்துடன் ஓடி சென்று அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இது சம்பந்தமாக காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட அவர்கள் நடத்திய விசாரணையில் அண்ணாமலை முன்னுக்குப் பின் முரணாக பேசியுள்ளார். அதன்பின் அவரது மகளிடம் நடத்திய விசாரணையில் தனது தந்தை அனுதாப வாக்குகளை வாங்குவதற்காக இதுபோல நாடகம் ஆடியதாகவும் அவரை யாரும் கடத்த வில்லை எனவும் கூறியுள்ளார். இதைக்கேட்ட போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை உருவானது.

Leave a Comment