Cinema History
யாருடா இளையராஜா?!.. கோபமாக கேட்ட கண்ணதாசன்!.. நடந்தது இதுதான்!….
தமிழ் சினிமாவில் முக்கிய இசையமைப்பாளராகவும், இசைஞானி என ரசிகர்களால் கொண்டாடப்படுபவராகவும் இருப்பவர் இளையராஜா. 1976ம் வருடம் வெளியான அன்னக்கிளி திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். 48 வருடங்களாக இசையுலகில் கொடி கட்டி பறந்து வருபவர்.
அவருக்கு முன்னும், பின்னும் பல இசையமைப்பாளர்களை ரசிகர்கள் பார்த்திருக்கிறார்கள். அவர்களின் பாடல்களை கேட்டிருக்கிறார்கள். ஆனால், ராஜாவின் இசையில் இருக்கும் எளிமையும், இனிமையும் மற்றவர் பாடல்களில் இல்லை என்றே சொல்ல வேண்டும். இளையராஜாவின் இசை பலருக்கும் ஆறுதலாகவும், மனக்காயத்திற்கு மருந்து போடும்படியும் இருக்கிறது.
இதையும் படிங்க: ரஜினிக்கும் இளையராஜாவுக்கும் என்னதான் பிரச்சனை? வீராவுக்குப் பிறகு இசை அமைக்கவே இல்லையே..!
70 மற்றும் 80களில் பிறந்தவர்களுக்கு இளையராஜாவின் இசைதான் மிகவும் பிடித்த ஒன்றாக இருக்கிறது. பல வருடங்களை தாண்டியும் அவரின் பாடல்கள் ரசிகர்களை தாலாட்டி வருகிறது. இளையராஜாவின் பாடல்களுக்கு கண்ணதாசன், வாலி, வைரமுத்து உள்ளிட்ட பல பாடலாசிரியர்கள் பாடல் வரிகளை எழுதியிருக்கிறார்கள்.
இளையராஜா சினிமாவுக்கு வருவதற்கு 20 வருடங்களுக்கு முன்பே சினிமாவில் நுழைந்தவர் கவிஞர் கண்ணதாசன். 60களில் எம்.எஸ்.விஸ்வநாதன் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களின் இசையில் பாடல்களை எழுதியிருக்கிறார். எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜிக்கு அதிக பாடல்களை எழுதியிருக்கிறார்.,
குறிப்பாக தமிழ் சினிமாவில் தேன் ரசம் சொட்டும் காதல் மற்றும் சிந்தனையை தூண்டும் தத்துவ பாடல்களை எழுதியவர் கண்ணதாசன். இளையராஜாவின் இசையில் உருவான ‘கண்ணே கலைமானே’ பாடல்தான் கண்ணதாசனின் கடைசி பாடலாக அமைந்தது.
கண்ணதாசனின் மகனும், நடிகருமான அண்ணாதுரை ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘அன்னக்கிளி படத்தில் நான் உதவி இயக்குனர். எங்கள் இயக்குனரின் அடுத்த படமான ‘பாலூட்டி வளர்த்த கிளி’ படத்திற்கும் இளையராஜாதான் இசை. அப்பா அந்த படத்திற்கு பாடல்களை எழுதினார். அது தொடர்பாக ஒரு சம்பவத்தை சொல்ல விரும்புகிறேன்.
பாட்டு எழுத அப்பாவை அழைத்து வரும் பொறுப்பை என்னிடம் கொடுத்துவிட்டனர். நான் அழைத்த போது ‘யார் இசையமைப்பாளர்?’ என அப்பா கேட்டார். நான் ‘இளையராஜா’ என்றேன். ‘இளையராஜாவா?.. யாருடா அது?’ எனக்கேட்டார். அன்னக்கிளி படத்துக்கு மியூசிக் போட்டவர். பாட்டெல்லாம் சூப்பர் ஹிட் என்றேன். ‘சரி நீ போ.. நான் வருகிறேன்’ என்றார்.
தயாரிப்பாளர், இயக்குனர், இளையராஜா, நான் என எல்லோரும் அப்பாவுக்காக காத்திருந்தோம். தாமதமாக வந்த அப்பா இளையராஜாவை பார்த்துவிட்டு ‘டேய் இது ராஜா… என்கிட்ட இளையராஜான்னு சொன்னே’ என கேட்டார்’ என சொன்னார் அண்ணாதுரை.
அன்னக்கிளி படத்தின் தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் ராஜாவுக்கு இளையராஜா என பெயர் வைத்தார். ஆனால், திரைத்துறையில் பலரும் ‘ராஜா’ என்றே அவரை அழைத்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நானும் இளையராஜாவும் ஒன்னா குடிப்போம்.. ஆனா இப்படி மாறுவாருனு நினைக்கல! ரஜினியின் ஃபிளாஷ்பேக்