Kamalhaasan: கமலை பற்றிப் பேசும்போது சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவிலேயே முதலீடு செய்பவர் என பொதுவாக சொல்வார்கள். பொதுவாக சினிமாவில் சம்பாதிக்க்கும் பணத்தில் பண்ணை வீடுகள் வாங்குவது, அடுக்குமாடி வீடுகள் வாங்குவது, விலை உயர்ந்த வெளிநாட்டு கார்களை வாங்குவது, பல தொழில்களிலும் முதலீடு செய்வது என நடிகர்கள் திட்டமிடுவார்கள்.
ஆனால், கமல் இதற்கு நேர்மாறானவர். சென்னையில் உள்ள 2 வீடுகளை தவிர அவருக்கு சொத்து என எதுவுமில்லை. சினிமாவை தவிர வேறு எந்த தொழிலிலும் அவர் முதலீடு செய்யவில்லை. சினிமாவில் பல பரிசோதனை முயற்சிகளை செய்து பார்த்த நடிகர் இவர். அதற்கு காரணம் தமிழ் சினிமாவின் தரத்தையும், ரசிகர்களின் ரசனையின் தரத்தையும் கொஞ்சம் உயர்த்த வேண்டும் என ஆசைப்படும் நடிகர் இவர்.
அப்படி அவர் செய்த முயற்சிகளில் 50 சதவீத படங்கள் மட்டுமே ஹிட் அடித்தது. மகாநதி, குணா, குருதிப்புனல், ஹேராம் போன்ற படங்கள் வணிகரீதியாக வெற்றியடையவில்லை. ஆனாலும் கமலின் முயற்சிகள் நிற்கவில்லை. மற்ற நடிகர்களை ஒப்பிடும்போது கமல் அதிகமாக சம்பாதிக்கவில்லை என்கிற இமேஜ்தான் அவர் மீது இருக்கிறது.
இந்நிலையில், மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் கமல் வேட்புமனுவுடன் தனது சொத்து விவரங்களை தாக்கல் செய்துள்ளார். அதில், தனக்கு 49.67 கோடி கடன் இருப்பதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார். அசையும் சொத்துக்களின் மதிப்பு 59.60 கோடி, அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ.245.86 கோடி என சொல்லியிருக்கிறார். மேலும், தன்னிடம் மகேந்திரா பொலிரோ, பென்ஸ், பி.எம்.டபிள்யூ, லக்சஸ் ஆகிய 4 கார்கள் இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
இதைத்தொடர்ந்து பிரபல சினிமா விமர்சகர் புளூசட்ட மாறன் ’போத்தீஸ் விளம்பரத்தில் நடிச்சது, பிக்பாஸ் பல சீசன்கள், கல்கி பார்ட் 1 மற்றும் 2 -வுக்கு வாங்கின சம்பளம், இந்தியன் 2 மற்றும் 3-க்கு வாங்கின சம்பளம். தயாரிப்பாளரா விக்ரம், அமரன் படங்களில் இருந்து வந்த லாபம் என எப்படிப்பார்த்தாலும் 1000 கோடி கல்லா கட்டி இருப்பீங்க. அப்புறம் எப்படி கடன்?’ என பதிவிட்டிருக்கிறார்.
லாஜிக் என்னவெனில் விக்ரம், அமரன் போன்ற படங்களின் லாபம் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் பெயரில் இருக்கும். கமல் தாக்கல் செய்திருப்பது தன்னை பற்றி மட்டுமே. நமக்கு 5 லட்சம் கடன் இருப்பது போல கமல் போன்றவர்களுக்கு 50 கோடி கடன் இருப்பதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை என சிலர் பதிவிட்டு வருகிறார்கள்.
