தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத நடிகராக சூர்யா இருந்தாலும் அவருடைய சமீப கால படங்கள் பெரும் தோல்வியை தழுவி வருகின்றன. அவர் ஒரு பெரிய ஹிட் கொடுத்தே கிட்டதட்ட பல வருடங்கள் ஆகிவிட்டன. சிங்கம் படத்திற்கு பிறகு அவருக்கு என ஒரு பெரிய வெற்றி என எந்த படமும் கொடுக்கவில்லை. சமீபத்தில் வெளியான கங்குவா மற்றும் ரெட்ரோ போன்ற திரைப்படங்கள் பெரிய எதிர்பார்ப்பில் இருந்த நிலையில் அந்தப் படமும் காலை வாரிவிட்டது .
இதனால் ரசிகர்கள் அனைவரும் சூர்யா மீது கடும் விமர்சனத்தை முன் வைத்தனர். கதையை தேர்ந்தெடுப்பதில் சூர்யா கவனம் செலுத்தவில்லையோ ஏன் இந்த மாதிரி எல்லாம் கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கிறார் என பல பேர் அவருக்கு அடுத்தடுத்து பல கேள்விகளை அடுக்கிக்கொண்டே வந்தனர். தற்போது ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா கருப்பு என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இன்னொரு பக்கம் தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி திரைப்படத்திலும் நடித்து வருகிறார். அவருடைய அடுத்தடுத்த ப்ராஜெக்ட்டுகளான வாடி வாசல், ரோலக்ஸ் போன்ற திரைப்படங்கள்தான் ரசிகர்களின் பெரும் நம்பிக்கையாக இருந்து வருகிறது. ஆனால் அந்தப் படம் நடக்குமா நடக்காதா என்ற ஒரு சந்தேகத்தின் பேரிலேயே இருந்து வருகிறது. இந்த நிலையில் சூர்யா சம்பந்தப்பட்ட ஒரு தகவல் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.
வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி அவர் நடத்தி வரும் அகரம் அறக்கட்டளை சார்பாக ஒரு பெரிய விழாவை கொண்டாட இருக்கிறாராம். அதாவது அகரம் அறக்கட்டளையை நிறுவி கிட்டத்தட்ட 15 வருடங்கள் முடிவடைந்து விட்டதாம். அந்த 15 வருட விழாவை சாய்ராம் கல்லூரியில் பிரம்மாண்டமாக நடத்த இருக்கிறாராம் சூர்யா. அதில் ஆரம்பத்தில் இருந்து இப்போது வரை படிக்கும் படித்த மாணவ மாணவியர்கள் அனைவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை சிறப்பிக்க உள்ளார்களாம்.
அது மட்டுமல்ல சிறப்பு விருந்தினராக கமல் மற்றும் அமீர்கான் ஆகியோரும் இந்த விழாவில் கலந்து கொள்வார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அகரம் அறக்கட்டளை சார்பாக பல்வேறு குழந்தைகளுக்கு கல்வியை வழங்கி வரும் சூர்யாவின் இந்த செயல் பலபேருக்கு தெரியாமல் இருந்திருக்கலாம். அதை சூர்யாவும் எந்த விதத்திலும் விளம்பரப்படுத்தியதே கிடையாது. இந்த விழா மூலம் இப்போது அது அனைவருக்கும் தெரியவரும். அதன் மூலமாவது சூர்யாவை இனி யாரும் விமர்சிக்க மாட்டார்கள் என்று நம்புவோம்.
