ரஜினி இப்போது சூப்பர்ஸ்டாராக இருக்கலாம். ஆனால் அவர் நடிக்க வந்த புதிதில் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டார்.. சினிமாவில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள எப்படியெல்லாம் போராடினார்? வாய்ப்பு கேட்டு எப்படியெல்லாம் பலரிடமும் கெஞ்சினார் என்பது பலருக்கும் தெரியாது.
ரஜினி போயஸ் கார்டன் வீட்டில் சொகுசாக வாழ்வதாக பலரும் பேசுவார்கள். ஆனால் சினிமாவில் வாய்ப்பு தேடும்போது அவர் மிகவும் சிறிய அறையில் தங்கி இருந்தார் என்பது அவரைப் பற்றி முழுமையாக தெரிந்தவர்களுக்கும், அவருடன் நெருக்கமாக பழகியவர்களுக்கும் நன்றாகவே தெரியும்.
இந்நிலையில்தான், ரஜினிக்கு நாளை பிறந்தநாள் என்பதால் அவருடன் சில படங்களில் நடித்தவரும் மூத்த நடிகருமான சிவக்குமார் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அதில் ‘1975ல் சினிமாவில் ரஜினி நடிக்க துவங்கிய காலம்.. அப்போது நான் பிரபல நடிகராக இருந்தேன்.. மாலை 6 மணி வரை சினிமா சூட்டிங்.. 6 மணிக்கு மேல் மேஜர் சுந்தரராஜனின் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தேன்.

கண்டிப்பாக ஆறு மணிக்கு மேல் எதாவது ஒரு சபாவில் நாடகம் நடக்கும். மியூசிக் அகாடமி அருகில் ரஜினி ஒரு சின்ன அறையில் அப்போது தங்கியிருந்தார். எப்போதெல்லாம் எங்கள் நாடகம் நடைபெறுகிறதோ தவறாமல் வந்து பார்ப்பார்.. ஒருநாள் என்னிடம் ‘சார் என் ஸ்கூட்டருக்கு 5 லிட்டர் பெட்ரோல்.. ஒரு பாக்கெட் சிகரெட்.. ரெண்டு டீ.. இது கிடைக்கிற மாதிரி எனக்கு உங்க நாடகத்துல வில்லன் வேஷம் வாங்கி கொடுங்க’ என்று கேட்டார் ரஜினி.
1976ல் அவர் நடித்த புவனா ஒரு கேள்விக்குறி படத்தில் முதன்முதலாக நான் வில்லனாக நடித்தேன். ரஜினி எப்போதும் எளிமையாக இருப்பார். பெங்களூரில் கண்டக்டராக இருந்த ஒருவர் இப்போது ஆசியாவின் பெரிய நடிகராக இருக்கிறார். 75 வயதிலும் அவர் ஹீரோவாக கலக்கிக் கொண்டிருக்கிறார். இப்போது போல் எப்போதும் அவர் நல்ல ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன்’ என அந்த வீடியோவில் பேசியிருக்கிறார் சிவக்குமார்.
