ரஜினி விஜய் போட்டிக்கு முற்றுப்புள்ளி வைத்தாலும் அது இன்றளவும் தொடர்ந்து கொண்டுதான் வருகின்றது. குறிப்பாக நேற்று ரஜினியின் பிறந்த நாள் என்பதால் பிரபலங்கள் பலரும் வாழ்த்து சொன்ன நிலையில் விஜய் வாழ்த்து சொல்லாதது ஏன் என்று விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
இன்னும் எத்தனையோ பேர் வாழ்த்துக்கள் சொல்லவில்லை என்றாலும் அது ஏனோ விஜய் என்றால் அது பூதாகரமாக மாறிவிடுகிறது. அதற்கு காரணம் இதற்கு முன் விஜய் ரஜினி இடையே நடந்த அந்த பனிப்போர் என்றே சொல்லலாம். அவர்களுக்குள் எந்தவித கருத்து வேறுபாடு இல்லை என்றாலும் அவர்களை சார்ந்த ரசிகர்களால் அது இன்று வரை தொடர்ந்து கொண்டு வருகிறது.
நேற்று ரஜினி தனது 75 வது பிறந்த நாளை கொண்டாடினார். ரசிகர்கள் அனைவரும் அவரது பிறந்த நாளை இனிப்புகள் வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர். பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை கூறினார்கள். சினிமாவில் 50 வருடங்கள் கடந்து ஒரு மகத்தான சாதனையை பெற்றிருக்கிறார் ரஜினி.
தி லெஜண்ட், பெரிய ஆளுமை, சினிமாவின் சிகரம் என்று பல வார்த்தைகளை சொல்லிக் கொண்டே போகலாம். அப்படிப்பட்ட ஒரு சிறந்த மனிதருக்கு சிறந்த சாதனையாளருக்கு ஒரு வாழ்த்து சொல்வதில் ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை. ஆனால் இதே தேதி கடந்த வருடம் சரியாக காலை 10 மணிக்கெல்லாம் விஜய் ரஜினிக்கு வாழ்த்து கூறி பதிவிட்டிருக்கிறார்.
இந்த வருடம் மட்டும் ஏன் அவர் கூறவில்லை என வழக்கம் போல விவாதங்கள் ஆரம்பித்திருக்கின்றன. வாழ்த்து சொல்வது அவரவர் விருப்பம். அப்படி கண்டிப்பாக வாழ்த்து கூற வேண்டுமா? விஜய் அரசியலுக்கு வந்த பிறகு ரஜினி வாழ்த்து கூறினாரா? அல்லது விஜயின் பிறந்த நாளுக்குத்தான் வாழ்த்து கூறினாரா என்றெல்லாம் விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் போய்க் கொண்டிருக்கின்றன. இதெல்லாம் ஒரு பிரச்சினையா என்று கூட தோன்றும். ஆனால் ஒரே துறையில் இருக்கும் நடிகர்கள். தன்னைவிட சினிமாவிலும் சரி, வயதிலும் சரி , சீனியர். இன்று தமிழ் சினிமாவை பொருளாதார ரீதியாக அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றதில் ரஜினியின் படங்களும் ஒரு காரணம். பாக்ஸ் ஆஃபிஸில் இவருடைய படங்கள்தான் பெரும்பாலும் வசூலை வாரி இறைத்து வருகின்றன. அப்படிப்பட்ட ஒரு மகா நடிகனுக்கு வாழ்த்து சொல்லியிருக்கலாம் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
