சிவகார்த்திகேயனை வைத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் ஆகிய திரைப்படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கத்தில் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடித்திருக்கும் திரைப்படம்தான் கொம்பு சீவி. இந்த திரைப்படத்தில் சரத்குமாரும் முக்கிய இடத்தில் நடித்திருக்கிறார்.
இந்த படம் தொடர்பான விழா நேற்று சென்னையில் நடந்தது. இந்த விழாவில் பேசிய சரத்குமார் விஜயகாந்த் தொடர்பான நினைவுகளை பகிர்ந்து கொண்டார். கொம்பு சீவி படத்தில் நான் நடிச்சதுக்கு முக்கிய காரணம் கேப்டன்தான். என் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானவர். நான் மிகவும் கஷ்டமான நிலையில் இருந்த போது சினிமாவில் நடிக்க முடிவெடுத்தேன். அவரிடம் சென்று வாய்ப்பு கேட்டேன். எனக்கு புலன் விசாரணை படத்தில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பு கொடுத்தவர் அவர்தான்.
என்னை பார்த்த உடனே அந்த படத்தில் நடிக்க இவர் சரியாக இருப்பார் என அவர் முடிவெடுத்தார். உடனே ஆர்கே செல்வமணியையும், இப்ராஹிம் ராவுத்தரையும் போய் பாருங்கள் என்றார். அப்போதே இந்த படத்தில் நான்தான் என முடிவு செய்துவிட்டேன். அதேபோல் அடுத்து கேப்டன் பிரபாகரன் படத்திலும் எனக்கு வாய்ப்பு கொடுத்தார்.
சில காட்சிகள் நடித்தபின் எனக்கு கழுத்தில் அடிபட்டு அறுவை சிகிச்சை செய்து ஆறு மாசம் என்னால் பேச முடியவில்லை. மருத்துவமனையில் இருந்தேன். என்னை வைத்து சில காட்சிகள் எடுக்க வேண்டியிருந்தது. வேறு ஒருவரை வைத்து எடுத்துக்கொள்ளலாம் என இயக்குனர் சொன்னபோது ‘வேண்டாம் சரத்குமார்தான் இதை செய்ய வேண்டும்.. ஆறு மாதம் ஆனாலும் பரவாயில்லை’ என்று சொல்லி எனக்காக காத்திருந்தார்.. அதுதான் விஜயகாந்தின் மனது. அதனால்தான் இந்த படத்தில் சண்முக பாண்டியன் நடிக்கிறார் என சொன்னதுமே நான் நடிக்க ஒப்புக்கொண்டேன்’ என்று பீலிங்காக பேசியிருக்கிறார் சரத்குமார்.
கொம்பு சீவி திரைப்படம் வருகிற 19ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.
