2025-ல் 200க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்கள் வெளியாகியிருந்தாலும் அதில் சில படங்கள் மட்டுமே ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் என எல்லோருக்கும் லாபத்தை கொடுத்தது. அப்படி வெற்றி பெற்ற 6 திரைப்படங்களைப் பற்றி பார்ப்போம்:
2025 பொருத்தவரை அதிக லாபத்தை கொடுத்த படமாக பிரதீப் ரங்கநாதன் நடித்து வெளியான டிராகன் திரைப்படம் இருக்கிறது. 35 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 150 கோடி வரை வசூல் செய்ததாக சொல்லப்பட்டது. அஸ்வத் மாரிமுத்து இயக்கியிருந்த இந்த படத்தில் கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன், இயக்குனர் மிஷ்கின் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

2வது இடத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான கூலி இருக்கிறது. நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றாலும் 400 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் 520 கோடி வரை வசூல் செய்ததாக சொல்லப்பட்டது.
3வது இடத்தில் தனுஷ் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நடித்து உருவான குபேரா இருக்கிறது. சேகர் கம்முலா இயக்கிய இந்த படத்தில் நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்த படம் தமிழில் பெரிய வசூலை பெறவில்லை என்றாலும் தெலுங்கில் பல கோடிகளை அள்ளியது. 100 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் 138 கோடி வரை வசூல் செய்ததாக சொல்லப்பட்டது.

4வது இடத்தில் பிரதீப் ரங்கநாதனின் டியூட் திரைப்படம் இருக்கிறது. கீர்த்தீஸ்வரன் இயக்கியிருந்த இந்த படத்தில் மமிதா பைஜு, சரத்குமார் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். 35 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் 114 கோடி வரை வசூல் செய்ததாக சொல்லப்பட்டது.
இந்த வருடத்திலேயே மிகவும் குறைவான பட்ஜெட்டில் உருவாகி அதிக லாபத்தை பெற்ற படம் என்றால் அது சசிக்குமார், சிம்ரன் நடித்து வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம்தான். பீல் குட் படமாக வெளிவந்த இந்த திரைப்படம் வெறும் 17 கோடி பட்ஜெட்டில் உருவாகி 90 கோடி வரை வசூல் செய்ததாக சொல்லப்பட்டது.

6வது இடத்தில் மாரி செல்வராஜ் இயக்கிய பைசன் திரைப்படம் இருக்கிறது. துருவ் விக்ரம் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தில் பசுபதி முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். 80களில் தென் மாவட்டங்களில் இருந்த சாதி கலவரம் மற்றும் கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களையும் அடிப்படையாக வைத்து இப்படத்தின் கதை, திரைக்கதையை உருவாக்கி இருந்தார் மாரி செல்வராஜ். வெறும் 30 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் 70 கோடி வரை வசூல் செய்ததாக சொல்லப்பட்டது.

