2025-ல் அதிக பட்ஜெட்டில் வந்த சில படங்கள் தோல்வியை பெற்ற நிலையில் சிறிய பட்ஜெட்டில் வெளியாகி அதிக வசூலை கொடுத்து தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் என எல்லோருக்கும் நல்ல லாபத்தை கொடுத்த சில படங்களை பற்றி பார்ப்போம்.
2025-ஐ பொருத்தவரை மிகவும் குறைவான பட்ஜெட்டில் உருவாகி அதிக லாபத்தை பெற்ற படம் என்றால் அது பிரதீப் பரங்கநாதன் நடிப்பில் வெளியான டிராகன் திரைப்படம்தான். இந்த படம் 35 கோடி பட்ஜெட்டுக்குள் உருவாகி 150 கோடி வரை வசூலை அள்ளியது. இந்த படத்தின் வசூல் பிரதீப் ரங்கநாதனை கோலிவுட்டின் முக்கிய நடிகராக மாற்றியிருக்கிறது.

2வதாக அதே பிரதீப் ரங்கநாதன் நடித்து வெளியான டியூட் திரைப்படம் 35 கோடி பட்ஜெட்டில் உருவாகி 114 கோடி வசூலை அள்ளியது. 40 வயதிற்கு மேற்பட்டவர்களை இந்த படம் கவரவில்லை என்றாலும் ஜென்சி என அழைக்கப்படும் இளசுகளுக்கு இந்த படம் பிடித்திருந்தது.
மூன்றாவதாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்த வெளியான பைசன் திரைப்படம் 30 கோடி பட்ஜெட்டில் உருவாகி 70 கோடி வரை வசூல் செய்ததாக சொல்லப்பட்டது. இந்த படம் 30 ஆண்டுகளுக்கு முன்பு தென் தமிழகத்தில் நடந்த சாதிய பிரச்சனைகள் மற்றும் கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்வில் நடந்த சம்பவங்களை கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது..

2025-ல் எந்த புரமோஷனும் இல்லாமல், ஆர்ப்பாட்டம் இல்லாமல் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் அசத்தலான வெற்றியை பெற்றது. ஒரு ஃபீல் குட் படமாக 17 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் 90 கோடி வரை வசூல் செய்து தயாரிப்பாளருக்கு அதிக லாபத்தை கொடுத்தது.
இந்த படத்தை அபிஷன் ஜீவிந்த் என்கிற இளைஞர் இயக்கியிருந்தார்.
கோலிவுட்டில் தற்போது வளர்ந்து வரும் நடிகராக மாறி இருப்பவர் மணிகண்டன். ஏற்கனவே ஜெய்பீம், குட் நைட் போன்ற ஹிட் படங்களை கொடுத்த அவர் நடித்து இந்த வருடம் வெளியான திரைப்படம்தான் குடும்பஸ்தன். வெறும் 8 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் 25 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது.
காமெடி நடிகராக இருந்து கதாநாயகனாக மாறி இருப்பவர் நடிகர் சூரி. இவரின் நடிப்பில் ஏற்கனவே சில படங்கள் ஹிட் அடித்த நிலையில் இந்த வருடம் இவர் நடித்து வெளியான மாமன் திரைப்படம் ஒரு வெற்றி படமாக அமைந்தது. 15 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் 45 கோடி வரை வசூல் செய்தது.

