நடிகர் விஜய் இரண்டு வருடங்களுக்கு முன்பே அரசியல் கட்சி தலைவராக மாறிவிட்டார். அரசியல் களத்தில் தொடர்ந்து திமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறார். மதுரை மற்றும் விழுப்புரத்தில் இரண்டு மாநாடு நடத்தப்பட்டு அதில் 10 லட்சம் பேர் வரை கலந்து கொண்டார்கள். அப்போது விஜய் தமிழக அரசியலில் ஒரு புதிய சக்தியாக உருவாகியிருப்பது எல்லோருக்கும் புரிந்தது.
சமீபத்தில் ஈரோடு மாவட்டத்திலும் பொதுக்கூட்டம் நடத்தி அதிலும் கலந்து கொண்டார் விஜய். அதிலும் 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டார்கள். முக்கிய விஷயம் என்னவெனில் அதிமுக, திமுக போன்ற கட்சிகளுக்கு பொதுக்கூட்டம் போடும்போது கூட்டத்தை திமுக நிர்வாகிகள் அழைத்து வர வேண்டும். ஆனால் தவெக கூட்டம் என்றால் விஜயை பார்ப்பதற்காகவே மக்கள் கூடுகிறார்கள்.
2026 சட்டமன்றத் தேர்தலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என விஜய் நினைக்கிறார். ஒரு பக்கம் அவரின் அரசியல் செயல்பாடுகள் பற்றி பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதோடு அவருக்கு அறிவுரைகளும் சொல்லி வருகிறார்கள்.

இந்நிலையில், இயக்குனர் அமீர் செய்தியாளர்களிடம் பேசிய போது ‘விஜய் பெரியாரையும், அம்பேத்கரையும் கொள்கை தலைவராக ஏற்று கட்சி துவங்கிய போது நான் மகிழ்ச்சி அடைந்தேன். அதேநேரம் எதிரியாக இருந்தாலும் தரக்குறைவாக பேசக்கூடாது. எதிரியை கருத்தால்தான் எதிர்கொள்ள வேண்டும். ஈரோட்டில் விஜய் நடத்தியது மாநாடு போல தெரியவில்லை.. ரசிகர்கள் சந்திப்பாகவே நான் பார்க்கிறேன்.. கொள்கைகளை மக்கள் முன்னே வைப்பவர்கள் மட்டுமே நிலைக்க முடியும்.. கட்சி ஆரம்பித்ததாலே ஒருவர் அரசியலில் நீடித்து நிற்க முடியாது’ என்றெல்லாம் பேசியிருந்தார்.
மேலும் விஜயுடன் இருப்பவர்கள் அவருக்கு உண்மையாக இருப்பார்கள் என நம்ப முடியாது.. இதைத்தான் கடந்த கால அரசியல் சொல்கிறது.. எனவே, அவர்களை விலக்கி வைத்துவிட்டு விஜய் தனது தந்தையை அருகில் வைத்துக் கொண்டால் அவருக்கு நல்ல வழிகாட்டுதலாக இருக்கும். ஏனென்றால் எந்த ஒரு தகப்பனும் தன் மகன் கெட்டுப் போக வேண்டுமென நினைக்க மாட்டார்’ என்று பேசியிருக்கிறார்.
