ரஜினியை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய திரைப்படம் கூலி. ஏற்கனவே விஜயை வைத்து மாஸ்டர், லியோ, கமலை வைத்து விக்ரம் போன்ற படங்களை கொடுத்திருந்ததால் ரஜினியுடன் லோகேஷ் கூட்டணி அமைத்தபோது பெரிய ஹைப் உருவானது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.
ஸ்ருதிஹாசன், சத்யராஜ், நாகார்ஜுனா, சௌபின் சாஹிர் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். தமிழ் சினிமாவில் முதல் 1000 கோடி வசூல் செய்யும் படமாக கூலி இருக்கும் என பலரும் நினைத்தார்கள். ஆனால் ‘150 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கும் ரசிகனை திருப்திப்படுத்தினால் போதும்’ என்று பேட்டி கொடுத்தார் லோகேஷ். ஆனால் படம் வெளியான பின் இந்த படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தது.
குறிப்பாக ரஜினியை வைத்து லோகேஷ் பக்கா ஆக்சன் படத்தை கொடுக்கப்போகிறார் என்று எதிர்பார்த்தால் கரண்ட் கனெக்சன் கொடுத்து ஒருவரை கொல்லும் ஒரு சேரை வைத்து படத்தை எடுத்திருக்கிறார் என்றெல்லாம் ரசிகர்கள் நக்கலடித்தார்கள். இவ்வளவு பெரிய பட்ஜெட்டில்
ரஜினியை வைத்து லோகேஷ் கனகராஜ் ஒரு நல்ல கதையை இயக்கியிருக்கலாம் என்றெல்லாம் பேசினார்கள்.
அதனால் கடுப்பான லோகேஷ் ‘எல்லோரையும் திருப்திப்படுத்தும் படி என்னால் படம் எடுக்க முடியாது’ என்று சொன்னார். இந்த படத்தின் ரிசல்ட்டால் ரஜினி, கமலை வைத்து லோகேஷ் எடுக்க நினைத்த படமும் அவரின் கையைவிட்டுப் போனதாக சொல்லப்பட்டது.
இந்நிலையில், கூலி வெளியாகி பல மாதங்களுக்கு பின் இந்த படத்துக்கு வந்துள்ள நெகட்டிவ் விமர்சனம் பற்றி கருத்து தெரிவித்துள்ள லோகேஷ் ‘கூலி படத்திற்கு பின் அடுத்தடுத்த படங்களுக்கு நிறைய வேலைகள் இருந்ததால் நான் பேட்டிகள் கொடுக்கவில்லை. உண்மைதான்.. கூலி படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தது.
அதை நான் ஏற்றுக் கொள்கிறேன். அடுத்தடுத்த படங்களில் அந்த தவறுகளை சரி செய்து கொள்வேன். அத்தனை விமர்சனங்களுக்கு மத்தியிலும் படம் 500 கோடி வசூல் செய்திருக்கிறது. அதற்கு காரணம் மக்கள் கொடுத்த ஆதரவுதான். ஊடகங்களுக்கும், பத்திரிக்கைகளுக்கும் என் நன்றி’ எனக் கூறியிருக்கிறார்.
