மலேசியாவில் இன்று நடைபெறவுள்ள ஜனநாயகன் படத்தின் ஆடியோ லான்ச்தான் ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் ஹாட் டாப்பிக்காக இருக்கிறது.

விஜய் நடித்திருக்கும் ஜனநாயகன் திரைப்படம் அவரின் கடைசி படமாக பார்க்கப்படுகிறது. எனவே இந்த விழா விஜயை வழியனுப்பும் விழாவாகவே பார்க்கப்படுகிறது.

எனவே இதில் கலந்து கொள்ள பலரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். குறிப்பாக உலகமெங்கும் உள்ள விஜய் ரசிகர்கள் இந்த விழாவிற்கு கலந்துகொள்வதற்காக டிக்கெட் வாங்கியிருக்கிறார்கள்.

80 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த விழாவில் கலந்து கொள்வார்கள் எனத் தெரிகிறது. குறிப்பாக விஜயை வைத்து ஹிட் படம் கொடுத்த இயக்குனர்கள் மற்றும் விஜயின் மனதுக்கு நெருக்கமானவர்கள் பலரும் இதில் கலந்துகொள்கிறார்கள்.

மலேசியா கோலாலம்பூரில் உள்ள புக்கெட் ஜாலில் மைதானத்தில் இந்த விழா இன்று நடைபெறவிருக்கிறது. முதலில் விஜய் படங்களில் இடம்பெற்ற ஹிட் பாடல்களை பல பாடகர்களும் பாடுகிறார்கள். அந்த நிகழ்ச்சி முடிந்ததும் ஜனநாயகனின் இசை வெளியீட்டு விழா நடைபெறவிருக்கிறது.

இதில் கலந்து கொள்வதற்காக நேற்று விஜய் தனி விமானம் மூலம் மலேசியா சென்றார். ஒருபக்கம், அவரின் அப்பா சந்திரசேகர், அம்மா ஷோபா, நடிகர் நாசர், பிரியாமணி, இயக்குனர் அட்லி, பூஜா ஹெக்டே உள்ளிட்ட பல பிரபலங்களும் மலேசியா சென்றுள்ளனர்.

இதுபோக சில முக்கிய திரையுலக பிரபலங்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக சொல்லப்படுகிறது. அதை ரகசியமாக வைத்திருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியை நேரடியாக யுடியூப் சேனலிலோ, தொலைக்காட்சியிலோ ஒளிபரப்பப்படவில்லை.

இந்நிலையில், இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக மலேசியா சென்ற பிரபலங்களின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது. ஜனநாயகன் படத்தை தயாரிக்கும் கேவிஎன் புரடெக்சன் நிறுவனமே தங்களின் சமூக வலைதள பக்கங்களில் இந்த புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்கள்.
