தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போதே அரசியலுக்கு போவது என முடிவெடுத்து அவரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார் விஜய். அதேநேரம் அரசியலுக்கு வர வேண்டும் என்பது விஜய் இப்போது எடுத்த முடிவல்ல. அவர் சினிமாவில் நடிக்க துவங்கிய போதிலிருந்தே அரசியலுக்கு போகவேண்டும் என்கிற ஆசை இருந்ததாக அவருடன் பல படங்களில் நடித்த நடிகர் தாமு உறுதி செய்திருக்கிறார்.
ஆனால் தனக்கு இப்படி ஒரு ஆசை இருக்கிறது என்பதை விஜய் எந்த பேட்டியிலும், எப்போதும், எங்கும் சொல்லவில்லை. 33 வருடங்களாக சினிமாவில் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்து தனக்கென ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தை உருவாக்கி அதன்பின்னர் சரியான நேரம் பார்த்து அரசியலுக்கு வந்திருக்கிறார் விஜய்.

அதேநேரம் விஜய் அரசியலுக்கு போகக்கூடாது.. அவர் சினிமாவில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என பல நடிகர், நடிகைகள் மற்றும் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். ஆனால் விஜய் அரசியல்தான் என்பதில் உறுதியாக இருக்கிறார். சமீபத்தில் மலேசியாவில் நடந்த ஜனநாயகனின் இசை வெளியீட்டு விழாவில் ஒரு லட்சம் பேர் விஜயை பார்ப்பதற்காக கலந்து கொண்டனர். அந்த விழாவில் பேசிய நடிகர் நாசர் கூட விஜய் சினிமாவில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இந்நிலையில் ஒரு வார இதழுக்கு பேட்டி கொடுத்த ஜனநாயகன் பட இயக்குனர் ஹெச்.வினோத் ‘விஜய் எல்லாத்தையும் விட்டுட்டு சந்நியாசமா போகிறார்? அடுத்த கட்டத்தை நோக்கிதானே போகிறார்.. அதற்கு வாழ்த்து சொல்லி அனுப்பலாம்.. அவ்வளவுதானே.. ஒரு மனுசன நேசித்து இவ்வளவு பேர் கூடியிருந்தது பிரமிப்பாக இருந்தது..
சாயங்காலம் 4 மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பிச்சி ராத்திரி 1 மணி வரை 9 மணி நேரம் நடந்திருக்கு.. ஜனங்க வர போற நேரம்லாம் சேர்த்தா மொத்தம் 13 மணி நேரம்.. இதுல 9 மணி நேர ஷோவில் மக்கள் காட்டிய உற்சாகம் என்னை சிலிரிக்க வச்சிடுச்சி’ என்று உணர்ச்சி பொங்க பேசியிருக்கிறார்.
