Connect with us
thandakaaranyam

Review

Thandakaaranyam Review: அதிகாரத்தை நோக்கிய கேள்வி!.. தண்டகாரண்யம் எப்படி இருக்கு?… திரை விமர்சனம்!…

அதியன் ஆதிரை இயக்கத்தில் கலையரசன், கெத்து தினேஷ் முக்கிய வேடத்தில் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் தண்டகாரண்யம். இப்படத்தின் முழு விமர்சனத்தை பற்றி பார்ப்போம்.

ஒரு வரிக்கதை:

பழங்குடி மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு எதிராக மலையில் தினேஷும், ராணுவத்தில் கலையரசனும் செய்யும் போராட்டமே இப்படத்தின் ஒருவரிக்கதை. இராமாயணத்தில் ராமரும், லட்சுமணனும் வனவாசம் சென்றபோது அலைந்து திரிந்த காடுகளை பற்றி பேசியதுதான் தண்டகாருண்யம். அதுபோல அண்ணன் தினேஷும், தம்பி கலையரசனும் காடுகளிலும், மலைகளிலும் சந்திக்கும் பிரச்சினையை இந்த தண்டகாரண்யம் திரைப்படம் பேசுகிறது.

thandakaaranyam
thandakaaranyam

அதிகாரவர்கத்தின் அடக்குமுறை:

பழங்குடியினரை அழிக்க பார்க்கும் அதிகார வர்க்கத்திற்கு எதிராக குரல் கொடுக்கிறார் தினேஷ். இதனால் வனத்துறை அதிகாரியாக பணியாற்றும் அவரின் தம்பி கலையரசனுக்கு வேலை போகிறது. எனவே தனது நிலத்தை விற்று கலையரசனை ராணுவத்தில் சேர்க்க முயற்சி செய்கிறார். ஜார்க்கண்டில் உள்ள ராணுவ பயிற்சி முகாமில் கலையரசன் சந்திக்கும் பிரச்சனைகளும், காட்டில் தினேஷம் சந்திக்கும் பிரச்சினைகளும் ஒரு புள்ளியில் வந்து நிற்கிறது. அதன்பின் என்னவாகிறது என்பதுதான் படத்தின் திரைக்ககதை

இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு திரைப்படத்தை இயக்கிய ஆதியன் ஆதிரை தண்டகாரண்யம் திரைப்படத்தையும் இயக்கி இருக்கிறார். பழங்குடி மக்களுக்கு எதிரான, அதிகார அடக்கமு முறையை தினேஷ் மற்றும் கலையரசன் கதாபாத்திரங்கள் மூலம் இந்த படத்தில் விரிவாக பேசி இருக்கிறார். பல வருடங்களாகவே கேட்கப்படும் பழங்குடியினர் வசிக்கும் காடுகள் அவர்களுக்கு சொந்தமா? இல்லை அரசுக்கு சொந்தமா? என்கிற கேள்விக்கு சட்டம் ஒரு பதிலையும், அறம் ஒரு பதிலையும் செல்கிறது. இதற்கு ஒரு கலை என்ன பதில் சொல்லுமோ அதை இயக்குனர் பேசி இருக்கிறார்.

படத்தின் மைனஸ் என்ன?..

காடுகளையும், ஜார்கண்டில் நடக்கும் ராணுவ பயிற்சி தொடர்பான காட்சிகளையும் சிறப்பாகவே காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். இந்த படம் தீவிரமான அரசியலை முன் வைக்கிறது. அதேநேரம் பழங்குடி மக்களின் பிரச்சினைகளை பேசிக் கொண்டிருக்கும்போது தினேஷ் கதாபாத்திரம் வன்முறையாக மாறி படத்தின் இயல்பை கெடுத்து விடுகிறது. பழங்குடி மக்களின் பிரச்சினைகளை இயல்பாக காட்டியிருந்தாலே அது ரசிகர்களுக்கு கடத்தப்பட்டிருக்கும். இந்த இடத்தில் இயக்குனர் தவறு செய்திருக்கிறார்.

thandakaaranyam
thandakaaranyam

பொதுவாக பழங்குடி மக்களின் மீது காவல்துறை மற்றும் அதிகாரவர்கத்தினர் காட்டும் அடக்குமுறை என்பது பெண்கள் மீது செலுத்தப்படும் பாலியல் வன்முறைகளைகளாகவே இருக்கும். ஆனால் இந்த படத்தில் அது இடம் பெறாதது பெரிய ஆறுதலாக இருக்கிறது. ஏற்கனவே விடுதலை போன்ற படங்களில் அது வந்து விட்டதால் இந்த படத்தில் அதை இயக்குனர் தவிர்த்து விட்டார் போலும்.

தினேஷ், கலையரசன் நடிப்பு:

தினேஷும், கலையரசனும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அதிகாரத்துக்கு எதிராக குரல் கொடுக்கும் நடிப்பு கலையரசனுக்கு நன்றாகவே வருகிறது. ஏற்கனவே ரஞ்சித் இயக்கத்தில் உருவான மெட்ராஸ் படத்தில் இதை செய்திருந்தார். லப்பர் பந்து திரைப்படத்திற்கு பின் தினேஷுக்கு தண்டக்காரன்யம் ஒரு முக்கிய படமாக அமைந்திருக்கிறது.

இந்த படத்தில் நடித்துள்ள சபீர் கல்லரக்கல் கோலிவுட்டுக்கு ஒரு நல்ல அறிமுகம். உணர்வுபூர்வமான காட்சிகளிலும் அசத்தலாக நடித்திருக்கிறார். மேலும் ரித்விகா, அருள்தாஸ் உள்ளிட்ட பலருக்கும் முக்கிய கதாபாத்திரங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. காடுகள் மற்றும் மலைகளில் எடுக்கப்படும் திரைப்படம் என்றால் ஒளிப்பதிவு மிகவும் முக்கியம். அது இந்த படத்தில் சிறப்பாகவே அமைந்திருக்கிறது. கலை இயக்குனர் தனது பணியை சிறப்பாக செய்திருந்தாலும் படத்தில் இறுதிக்காட்சியில் கலையரசன் குழு வைத்திருக்கும் ஏகே 47 டம்மி என்பது பார்க்கும்போதே தெரிகிறது. அதை இயக்குனர் சரி செய்திருக்கலாம்.

மொத்தத்தில் தண்டகாரண்யம் திரைப்படம் அதிகாரத்திற்கு எதிராக பழங்குடியின மக்கள் காட்டும் எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறது. கண்டிப்பாக இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டை பெறும் என்று கணிக்கப்படுகிறது.

author avatar
சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Review

To Top