விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ஜனநாயகன். தெலுங்கு சினிமாவில் நடிகர் பாலகிருஷ்ணா நடித்து வெளிவந்த பகவந்த் கேசரி படத்தின் கதையை கொஞ்சமாக மாற்றி ஜனநாயகன் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த படத்தில் பூஜா ஹெக்டே, மமித பைஜூ, மற்றும் ஹிந்தி நடிகர் பாபி தியோல், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். பொங்கலை முன்னிட்டு இந்த படம் வருகிற 9ம் தேதி வெளியாகவுள்ளது.
சமீபத்தில் கூட இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது. இதில் சுமார் ஒரு லட்சம் பேர் வரை கலந்து கொண்டார்கள். விஜய் அரசியலுக்கு சென்று விட்டதால் இது அவரின் கடைசி படமாக பார்க்கப்படுகிறது. எனவே, இந்த படத்தைக் காண விஜய் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
Also Read
ஆனால், இதுவரை இந்த படத்துக்கு சென்சார் சான்றிதழ் கொடுக்கப்படவில்லை. டிசம்பர் 18ம் தேதி சென்சாருக்கு படத்தை அனுப்பி விட்டார்கள். படத்தை பார்த்துவிட்டு சென்சார் அதிகாரிகள் சில மாறுதல்களை சொல்ல அதையும் படக்குழு செய்து கொடுத்து விட்டது. ஆனால் பல நாட்கள் ஆகியும் சென்சார் சான்றிதழ் கொடுக்கப்படவில்லை.
பட ரிலீசுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க கோரி பட தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர்ந்துள்ளது. இன்று மதியம் 2:15 மணிக்கு இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.
சான்றிதழ் கொடுக்காமல் சென்சார் அதிகாரிகள் இழுத்தடித்து வருவதால் ஜனநாயகன் திரைப்படம் திட்டமிட்டபடி ஜனவரி 9ம் தேதி வெளியாகுமா என்கிற சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. இது விஜய் ரசிகர்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.



