விஜய் நடித்திருக்கும் ஜனநாயகன் திரைப்படம் வருகிற 9ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்ட நிலையில், டிசம்பர் 19ஆம் தேதி சென்சார் குழுவுக்கு படத்தை அனுப்பியிருக்கிறார்கள். படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் சில வசனங்களை நீக்கவும், சில வசனங்களை மியூட் செய்யவும் சொல்லியிருக்கிறார்கள்.
அதையும் படக்குழு செய்துவிட்டது. ஆனால் இப்போதுவரை சென்சார் அதிகாரிகள் சான்றிதழ் அளிக்கவில்லை. ரிலீஸுக்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் படத்தை தயாரித்த கேவிஎன் நிறுவனம் சார்பில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை அவசர வழக்காக எடுத்து விசாரிக்குமாறு கேட்கப்பட்டது. அதன்படி இன்று மதியம் 2.30 மணிக்கு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
Also Read
அப்போது, மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் காட்சிகள் உள்ளதாக வந்த புகாரை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார். அதோடு, வழக்கையும் நாளை ஒத்தி வைத்தார். ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டிருந்தாலும் நாங்கள் சட்டப்படிதான் செல்ல முடியும் ஒன்றிய அரசு தரப்பு வழக்கறிஞர் வாதாடினார். இது ஜனநாயகன் படக்குழுவினருக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
நடக்கும் விஷயங்களை பார்க்கும்போது ஜனநாயகன் படம் திட்டமிட்டபடி வருகிற 9ம் தேதி ரிலீஸாகுமா என்கிற கவலை விஜய் ரசிகர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. பாஜகவை விஜய் கொள்கை எதிரி என தொடர்ந்து விமர்சித்து வருவதால் இதற்கு பின்னணியில் அரசியல் காரணங்கள் இருக்கிறது என விஜய் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் பொங்கி வருகிறார்கள்.



