
தமிழ் சினிமாவில் சிறந்த தயாரிப்பாளராகவும் வினியோகஸ்தராகவும் இருந்து வருகிறார் கலைப்புலி எஸ்.தாணு. வி.கிரியேஷன்ஸ் மூலம் பல வெற்றிப்படங்களைக் கொடுத்திருக்கிறார். குறிப்பாக ரஜினி, விஜய், சூர்யா என பல முன்னணி நடிகர்களை வைத்து ஏராளமான படங்களை தயாரித்திருக்கிறார். வண்ணவண்ணப் பூக்கள் படத்திற்காக இவருக்கு தேசிய விருதும் கிடைத்துள்ளது.
ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் கிடைக்க இவரின் பங்கு மிக முக்கியமானது.யார் என்ற படத்தின் மூலம் முதன் முதலில் தயாரிப்பாளராக அறிமுகமானார் தாணு. அந்தப் படம் 1975 ஆம் ஆண்டு வெளியானது. அதன் பிறகு கூலிக்காரன், நல்லவன் போன்ற படங்களை தயாரித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒருதனி முத்திரையை பதித்தார்.
இவரின் தயாரிப்பில் கிழக்குச் சீமையிலே, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், காக்க காக்க, துப்பாக்கி, தெறி, கபாலி போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கவை. இந்த நிலையில் தாணுவை பற்றி பிரபல திரைவிமர்சகர் புளூசட்டை மாறன் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார்.
அதாவது தன்னுடைய படத்தின் இயக்குனர்களை கையாள்வதில் தயாரிப்பாளர் தாணு ஒரு தனி ஸ்பெஷலிஸ்ட்தான் என்று கூறியிருக்கிறார். மேலும் இந்த மாதிரி கிடுக்கிப்பிடிகள் சினிமாவில் மிகமிக அவசியம். அப்படி இல்லையென்றால் பல மணி நேர படத்தை இரண்டு பாகங்களாக எடுத்து சினிமாக்காரர்கள், ரசிகர்கள், தயாரிப்பாளர்களை வெளியேற்றுவதில் வல்லவர்கள் இப்படியான சில இயக்குனர்கள்.
இன்னும் படத்தை அரை மணி நேரம் குறைத்திருந்தால் தாணுவிற்கு சிலையே வைத்திருக்கும் இந்த கோடம்பாக்கம் என புளூசட்டை மாறன் கூறியிருக்கிறார். இவர் இப்படி கூறியதற்கு பின்னணியில் மிஷ்கின் இயக்கிய ட்ரெயின் படம்தான் காரணம். ஏனெனில் இந்தப் படம் ஆரம்பத்தில் 2மணி 50 நிமிடமாக இருந்ததாம். பிறகு தயாரிப்பாளர் தாணு அதை இன்னும் குறைக்க சொல்லியிருக்கிறார்.

ஆனால் மிஷ்கினின் உதவியாளர்கள் விரும்பவில்லையாம். இருந்தாலும் 2 மணி 40 நிமிடமாக குறைத்தாராம் மிஷ்கின். ஆனாலும் தயாரிப்பாளர் இன்னும் அதை குறைக்க சொல்லியிருக்கிறார். இதனால் மிஷ்கினின் உதவியாளர்கள் கடுப்படைந்துவிட்டார்களாம். ஆனாலும் மிஷ்கின் மேலும் அதை 2 மணி 25 நிமிடமாக குறைத்திருக்கிறார். இதை குறிப்பிட்டுத்தான் புளுசட்டை மாறன் இப்படியான ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார்.