
இன்ஜினியரிங் படித்துவிட்டு சினிமா எடுக்கும் ஆசையில் கோலிவுட்டுக்கு வந்த பலரில் அஸ்வத் மாரிமுத்துவும் ஒருவர். அசோக் செல்வன், ரித்திகா சிங் மற்றும் வாணி போஜன் உள்ளிட்ட சிலரை வைத்து இவர் இயக்கி ஓ மை கடவுளே திரைப்படம் 2020ம் வருடம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
இந்த படத்துக்கு பின்னர் அசோக் செல்வன் ரசிகர்களால் கவனிக்கப்பட்டார். ஒரு சிறந்த ஃபீல் குட் படமாகவும் இது உருவாகியிருந்தது..
அதன்பின், அதே திரைப்படத்தை தெலுங்கில் இயக்கினார் அஸ்வத் மாரிமுத்து. அதேநேரம், பிரதீப் ரங்கநாதனை வைத்து இவர் இயக்கிய டிராகன் திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று 100 கோடி வசூலை பெற்றது. இந்த படத்தில் கயாடு லோகர், மிஷ்கின், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். எனவே கோலிவுட்டில் முக்கிய இயக்குனராக அஸ்வத் மாரிமுத்து மாறினார்.
டிராகன் படம் உருவாகும்போதே நடிகர் சிம்புவின் 51-வது திரைப்படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் ரஜினி தலைவர் 173 படத்திலிருந்து சுந்தர்.சி விலகியபோது ரஜினிக்கு கதை சொல்லப் போன சில இயக்குனர்களில் அஸ்வத் மாரிமுத்துவும் ஒருவர். அவர் சொன்ன கதை ரஜினிக்கு பிடித்திருந்தாலும் அது டேக் ஆப் ஆகவில்லை. அதன் பின் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ரஜினி நடிப்பது உறுதியானது..
இந்நிலையில், ரஜினிக்கு சொன்ன அதே கதையை கொஞ்சம் மாற்றி சூர்யாவிடம் சொல்லி சம்மதம் வாங்கி இருக்கிறார் அஸ்வத் மாரிமுத்து. இந்த படம் ஸ்டைலான ஒரு மாஸ் பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும் என்கிறார்கள்.. சிம்பு படத்தை முடித்துவிட்டு சூர்யாவின் படத்தை அஸ்வத் இயக்குவார் எனத்தெரிகிறது.