
கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற படங்கள் மூலம் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையே உருவாக்கியவர் லோகேஷ் கனகராஜ். விஜயை வைத்து மாஸ்டர், லியோ ஆகிய படங்களை இயக்கி விஜய் ரசிகர்களுக்கும் பிடித்த இயக்குனராக மாறினர். கமலை வைத்து இவர் இயக்கிய விக்ரம் படம் இவரின் மாஸ்டர் பீஸாக அமைந்தது.
அதேநேரம் லியோ, கூலி ஆகிய படங்களின் திரைக்கதை ரசிகர்களை ஈர்க்கவில்லை. ஏதோ குறை இருந்தது போலவே ரசிகர்கள் உணர்ந்தார்கள். இது தொடர்பான வந்த விமர்சனங்களை லோகேஷும் ஏற்றுக்கொண்டார். அதன்பின் ரஜினி, கமல் இணைந்து நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பு இவருக்கு வந்தது. ஆனால், ரத்தம் தெறிக்கும் ஆக்ஷன் கதையை சொன்னதால் அதில் நடிக்க ரஜினி, கமல் இருவருமே விரும்பவில்லை. எனவே, அந்த படம் லோகேஷின் கையை விட்டுப்போனது.
அதன்பின் கைதி 2 படத்தை லோகேஷ் இயக்கப்போகிறார் என செய்திகள் வெளியானது. ஆனால் அதுவும் நடக்கவில்லை. அதன்பின் புஷ்பா பட புகழ் அல்லு அர்ஜூனை வைத்து லோகேஷ் ஒரு புதிய படத்தை இயக்கவிருக்கிறார் என செய்திகள் வெளியானது. அல்லு அர்ஜூன் இப்போது அட்லி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்தபின் அவர் லோகேஷின் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.
இந்நிலையில், இந்த படத்தின் கதை, திரைக்கதை தொடர்பாக விவாதிக்க தனது டீமுடன் லோகேஷ் இப்போது ஏற்காட்டுக்கு சென்றிருக்கிறாராம். அனேகமாக இந்த படத்தில் பூஜா ஹெக்டே மற்றும் மதராஸி, காந்தாரா 2 போன்ற படங்களில் நடித்த ருக்மணி வசந்த் கதாநாயகிகளாக நடிப்பார்கள் எனத்தெரிகிறது. ஒருபக்கம் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் DC என்கிற படத்தில் லோகேஷ் ஹீரோவாகவும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.