latest news
எல்லாம் நம்ம வரிப்பணம் .. 2 தொகுதி மேட்டரில் விஜய்யை வச்சு செய்யும் இணையவாசிகள்.. வைரலாகும் கேப்டன் வீடியோ!
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேற்று வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தை சென்னையில் நடத்தினார். இதில் வரவிருக்கும் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் அதவது சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்தார். மாற்று சக்தியாக தன்னை முன்னிறுத்தி களமிறங்கியுள்ள விஜய், ஏன் இரண்டு தொகுதிகளைத் தேர்ந்தெடுத்துள்ளார் என்பது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது. ஒருவேளை ஒரு தொகுதியில் தோற்றுவிட்டால், மற்றொரு தொகுதி கை கொடுக்கும் என்ற தோல்வி பயம் தான் இதற்கு காரணமா? என்று சமூக வலைதளங்களில் பலரும் தங்களது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில், மறைந்த தேமுதிக தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் நடித்த தென்னவன்’ பட வசனத்தை இணையவாசிகள் வைரலாக்கி விமர்சித்து வருகின்றனர்.
அந்த வீடியோ காட்சியில், ஒரு வேட்பாளர் ஒரே நேரத்தில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடக் கூடாது என விஜயகாந்த் கூறுவார். அப்போது குறுக்கிடும் ஒரு பத்திரிகையாளர், “இது ஜனநாயகத்திற்கு எதிரானது இல்லையா? எனக் கேள்வி எழுப்புவார்.
அதற்கு பதிலடி கொடுக்கும் விஜயகாந்த், ஒரே நேரத்தில் இரண்டு தொகுதிகளில் நிற்பதுதான் ஜனநாயகத்திற்கு எதிரானது. இரண்டு தொகுதியிலும் ஒரு வேட்பாளர் போட்டியிட்டு, இரண்டிலும் வென்ற பின்னர், ஒரு தொகுதியை ராஜினாமா செய்வார். அதன் பின்னர் அந்த தொகுதியில் மீண்டும் இடைத்தேர்தல் நடத்தச் சொல்வது.. இதற்கெல்லாம் யார் பணம் செலவாகிறது? கை வண்டி இழுப்பவனும், மூட்டை தூக்குபவனும் கஷ்டப்பட்டு கட்டும் வரிப்பணம்தானே? வேலை செய்து கஷ்டப்பட்டு வரி கட்டும் அப்பாவி மக்களின் வரிப்பணத்தை இப்படி வீணடிப்பதா? அரசியல்வாதிகளின் ஈகோவுக்காக மக்களை முட்டாளாக்குவதை இன்னும் எத்தனை வருஷம்தான் அனுமதிக்க முடியும்?” என ஆவேசமாகக் கேட்பார்.
விஜயகாந்தின் இந்தத் அனல் பறக்கும் வாதம் அடங்கிய வீடியோவை தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக்கி வரும் நெட்டிசன்கள், “அன்று கேப்டன் திரையில் சொன்னது, இன்று விஜய்க்கு கச்சிதமாகப் பொருந்துகிறது” எனப் பதிவிட்டு வருகின்றனர்.
