ஏழுமலையானைப் பழிவாங்க நினைத்த எம்.ஆர்.ராதா.... அடி விழுந்தும் மனுஷன் அசரலையே...!
நடிகர்களில் வில்லத்தனத்தை சற்றே மாறுபட்ட கோணத்தில் நகைச்சுவையுடன் தந்து ரசிகர்களை வியக்க வைத்தவர் எம்.ஆர்.ராதா. இவர் ஒரு நாத்திகவாதி என்பது நாமறிந்ததே. அவருடைய வாழ்வில் கடவுள் வந்தது எப்படி என்பது ஆச்சரியமான விஷயம். இதைப்பற்றி இயக்குனர் ஏ.சி.திருலோகசந்தர் தனது கருத்துகளை இவ்வாறு பகிர்ந்துள்ளார்.
மறைந்த குதர்க்கவாதி எம்ஆர்.ராதா. இவர் கோடீஸ்வரர். கோவில் தர்மகர்த்தா. கர்ப்பக்கிரகத்தின் முன் நின்று பக்தி சிரத்தையோடு ஆண்டவனிடம் வேண்டிக் கொண்டிருப்பார். ஆண்டவனே என்னை மட்டும் நல்லா வச்சிரு.
பக்கத்து வீட்டுக்காரன் எல்லாம் அம்போன்னு போயிடணும் என்று பிரார்த்திப்பார். பக்கத்திலிருந்த அவர் மனைவி ஏங்க, மீதிப் பேரை எல்லாம் வம்பிழுக்குறீங்கன்னு கேட்பார்.
ராதா சொல்வார். அடிப்போடீ பயித்தியக்காரி. நான் நல்லா இருக்கணும் சரிதான். பக்கத்து வீட்டுக்காரனும் ஓகோன்னு இருந்தா என்னை மதிப்பானா..? நான் ஒசந்து அவன் தாழ்ந்து தேஞ்சிப் போய் இருந்தாத்தானே நமக்குக் கவுரவம். மனதிருப்தி. அவர் வாதத்திலும் நியாயம் இருப்பதாகச் சிலர் கருதலாம்.
எம்.ஆர்.ராதாவின் வரலாற்றில் படித்தது. சிறுவனாக இருந்தபோது பலரும் சேர்ந்து கஷ்டப்பட்டு, ஏழுமலை ஏறி திருப்பதி, திருமலை அடைந்திருக்கிறார்கள். அப்போது தர்ம தரிசனம் இல்லை என்று சொல்லிவிட்டார்கள்.
இவருக்கு கையில் காசில்லை. ஆண்டவன் தரிசனம் தடைபடுத்தப்பட்டது. பசியோடும், ஒரு வைராக்கியத்தோடும் ஏழுமலை இறங்கி வந்தார். ஆண்டவன் மீது தீராத கோபம். அப்போதெல்லாம் நாடகத்தில் காட்சிகளை மாற்றி வெடியும், ஒளியும் கிளப்புவார்கள்.
இவருக்கு அந்த வெடி செய்யத் தெரியும். கொஞ்சம் கொஞ்சமாக அதிக மருந்து சேகரித்து ஒரு பாம் தயாரித்துக் கொண்டிருந்தார். அந்த பாமை மறைத்து எடுத்துக் கொண்டு பழிவாங்கும் எண்ணத்தோடு ஆண்டவன் சன்னதியில் போட்டு உடைக்கத் திட்டமிட்டு இருந்தார்.
மலை ஏறுவதற்குத் தயாராக நின்ற நிலையில் அந்த அவசரப்பட்ட பாம் அவர் கையோடு வெடித்தது. கை நிறைய காயங்களோடு மீண்டும் திருப்பதி ஆண்டவனைத் தரிசிக்காமலேயே திரும்பி வந்தார்.
ஒரு நாள் நானும் ஒரு பெண் படப்பிடிப்பிற்குப் பிறகு மதியம் உணவருந்த வீட்டிற்குச் சென்ற எம்ஆர்.ராதா சற்று நேரம் கழித்து வந்தார். என்னைப் பார்த்து சிரித்தபடியே ஏதோ சொல்ல வந்தவர் சற்றுத் தயங்கினார்.
சொல்ல வந்த விஷயத்தைச் சொல்லுங்கள் என்றேன். சிரித்து விட்டு சொன்னார். நான் லேட்டாக வந்ததற்குக் காரணம்...வீட்டில் மட்டன் பிரியாணி. பெரியார் விரும்பி சாப்பிடும் உணவு. நான் அறிவித்தப்படி அவருக்குக் கொடுக்க சென்றேன்.
அவரும் வாங்கிக் கொண்டார். எப்போதெல்லாம் எனக்குப் பெரியாரைப் பார்க்கத் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் இப்படி ஒரு சாக்கு வைத்துப் போவேன். அதை அவரும் பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ள மாட்டார். அவர் சந்தோஷம் தான் என் சந்தோஷம். அதுதான் என் பெரியார் என்று மனநிறைவோடு சொன்னார்.