Cinema History
கையே இரும்பு மாதிரி!. அவரா இப்படி?.. பாக்கவும் விடமாட்றாங்க!. புலம்பும் வாகை சந்திரசேகர்…
விஜயகாந்துடன் நெருங்கிப் பழகிய நண்பரும், சக நடிகருமான சந்திரகேர் தனது நண்பரின் உடல்நிலை குறித்தும், கடந்த கால நினைவுகள் குறித்தும் இவ்வாறு சொல்கிறார்.
அவருடன் நெருங்கிப் பழகிய நண்பர்களுள் நானும் ஒருவன். அவர் எவ்வளவு சுறுசுறுப்பாக இருப்பார் என்று எனக்குத் தெரியும். சிவப்பு மல்லி படத்தை 15 நாள்களில் எடுத்தார் ராமநாராயணன். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றி. இரவு பகல்னு பார்க்கவே மாட்டார். நான் கூட அடிக்கடி உடல்நலக்குறைவாக இருப்பேன். நண்பர் விஜயகாந்த் எனக்குத் தெரிந்த வரை 40 ஆண்டு காலத்தில் ஒருநாள் கூட தலைவலி, காய்ச்சல்னு படுத்ததே இல்லை.
அவர் ஒரு கமர்ஷியல் ஹீரோ. ஒரு படத்துக்கு 30 நாள் வரை கடுமையான உழைப்பை தருவார். அசராம வேலை செய்வார். எல்லாருக்கும் நல்லது செய்ற விஜயகாந்துக்கு ஏன் இப்படி ஒரு நிலைமை? காலம் அப்படித்தான் இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது. அதனால் எனக்கு ரொம்ப வருத்தம். அவரைப் போய் பார்ப்பதற்கு வாய்ப்புகள் தடைபட்டன.
45 வருஷ நண்பர். ஒரே நேரத்தில் புறப்பட்டு வந்து சினிமாவில் நடிப்பதற்கு முன்பே நட்பானோம். ஒரே அறையில் தங்கி ஒரே பாயில் படுத்து ஒரே உணவை சாப்பிட்டு போராடி வெற்றி பெற்றோம். அரசியலில் கலைஞர், எம்ஜிஆருடன் நல்ல நட்பு. அவர் தனியாக கட்சி தொடங்கினாலும் எங்களுக்குள் நல்ல நட்பு இருந்தது.
ஆனா விஜயகாந்த் ஆக்ரோஷமா நடிப்பார். ஆக்ரோஷமா பேசுவார். ஆனா உண்மையில் பார்த்தா நான் தான் கோபக்காரன். ஊமை விழிகள் படத்துக்கு எங்கிட்ட தான் கதை சொல்றாங்க. அந்த தீனதயாள் டிஎஸ்பி கேரக்டருக்கு யாரைப் போடலாம்னு பேசும்போது நான் விஜயகாந்த் தான் இதுக்கு சரியான ஆள்னு சொன்னேன். அதே மாதிரி நான் விஜயகாந்த் கிட்ட சொல்லி அவரு நடிக்க அது ஒரு பெரிய வெற்றியைக் கொடுத்தது.
அதன் பிறகு தான் செந்தூரப்பூவே, உழவன் மகன்னு ஹிட்டான படங்கள் வந்தது. எனக்கு இப்போ என்ன தோணுதுன்னா அந்த 40 ஆண்டுகால நினைவுகளைப் பார்க்கும்போது, நண்பா நீ நலமுடன் எழுந்து வா. கம்பீரமாக வா. எந்த சூழலிலும் உன் அற்புதமான சிரிப்பு, நகைச்சுவை. எனக்குத் தெரிந்து உனக்கு காய்ச்சல், தலைவலின்னு படுத்ததே இல்லை. ஆனால் இப்போது பெரும்படுக்கையாகப் படுத்திருக்கிறாயே. இதுதான் எனக்கு ரொம்ப வேதனையாக இருக்கிறது.
நீ எழுந்து வந்து அரசியல் பணிகளைச் செய்ய வேண்டும். அது எனது ஆவல். அது நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. ஏன்னா அவர் ரைஸ்மில்ல மூட்டைக்குள்ள என்ன நெல்லு இருக்குன்னு பார்க்க கை விரலாலேயே குத்திக் கிழித்துப் பார்த்து விடுவாராம்.
வழக்கமா எல்லோரும் கொக்கி போன்ற ஒரு கம்பியை வைத்துத் தான் குத்தி அதன்பிறகு நெல்லை எடுத்துப் பார்ப்பார்கள். ஆனா விஜயகாந்த் விரலாலேயே பார்த்தார் என்றால் எவ்வளவு திடமாக இருந்து இருப்பார்? சினிமாவில் சண்டை போடும் போது கால்கள் பேசும். அப்படிப்பட்ட கால்களும், கைகளும் இன்று செயல் இழந்து இருப்பது தான் வேதனை.