கருத்துகளை காமெடி தடவி நச்சின்னு சொன்ன பாக்கியராஜ் படங்கள்...ஒரு பார்வை...
சமுதாயத்திற்குத் தேவையான கருத்துகளை நகைச்சுவை கலந்து நாசூக்காக சொல்வதில் தனிச்சிறப்பு வாய்ந்தவர் நடிகரும் இயக்குனருமான பாக்யராஜ். இவரது படங்கள் அனைவரும் குறிப்பாக தாய்க்குலங்கள் போற்றும் வகையில் கருத்து செறிவுடன் இருக்கும். அவற்றில் ஒரு சிலவற்றைப் பார்ப்போம்.
முந்தானை முடிச்சு
கே.பாக்யராஜின் இயக்கத்தில் வெளியான படம் முந்தானை முடிச்சு. குறிப்பாக முதல் மனைவியை இழந்த ஒருவன் இரண்டாம் திருமணம் முடிக்கும்போது சித்தி கொடுமைக்காரியாக வருவாள் என்பது பலருடைய எண்ணம். இதைத் தவறு என்பதை இந்தப் படம் வலியுறுத்துகிறது.
அதே போல் நாம் இருவர் நமக்கு ஒருவர் என்பதற்கேற்ப குடும்பம் கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும் என்றும் அதற்காக பெண்கள் கருத்தடை செய்ய வேண்டும் என்பதையும் படம் எடுத்துச் சொல்கிறது.
முருங்கைக்காயில் எவ்வளவு சத்துகள் உள்ளன என்பதையும் படம் நாசூக்காக சொல்கிறது. படத்தில் ஜோடியாக நடித்த ஊர்வசியின் நடிப்பு பிரமாதம். இளையராஜாவின் இன்னிசையில் பாடல்கள் அற்புதம். ஏவிஎம்மின் மாபெரும் வெற்றிப்படைப்பு இது.
தூறல் நின்னு போச்சு
கே.பாக்யராஜ் நடித்து இயக்கிய இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. வரதட்சணைக் கொடுமையால் விரும்பி திருமணம் செய்து கொள்ள முடியாதவர்கள் எப்படி எப்படி எல்லாம் பிரச்சனைகளை சந்திக்கின்றனர் என்பதை படம் வெகு நேர்த்தியாக சொல்கிறது.
பாடல்கள் அனைத்தும் முத்து முத்தாக உள்ளன. இளையராஜாவின் இன்னிசையில் தங்கச்சங்கிலி மின்னும் பைங்கிளி என்ற காதல் ரசம் சொட்டும் பாடல் இந்தப்படத்தில் தான் இடம்பெற்றுள்ளது.
அந்த ஏழு நாட்கள்
கே.பாக்யராஜ் நடித்து இயக்கிய அற்புதமான படங்களுள் ஒன்று அந்த ஏழு நாட்கள். படத்தில் நாயகி தாலியானது தமிழ் பெண்களின் உயிர் எனச் சொல்கிறாள். அதே நேரம் படத்தின் கிளைமாக்ஸில் தாலியின் புனிதத்தையும் உணர்த்தி விட்டுப் போகிறாள்.
தன் மனதிற்குப் பிடிக்காதவனாக இருந்தாலும் கழுத்தில் தாலி ஏறி விட்டால் அப்பெண் அவனோடு தான் வாழ வேண்டும் என்பதை இப்படம் வலியுறுத்துகிறது.
மௌன கீதங்கள்
கே.பாக்யராஜ் நடித்து இயக்கிய படம் மௌன கீதங்கள். மூக்குத்திப் பூமேலே காற்று உட்கார்ந்து வீசுதடி என்ற சூப்பர்ஹிட் பாடல் இந்தப்படத்தில் தான் இடம்பெற்றுள்ளது.
படத்தில் காதலித்து மணம் புரிந்த தம்பதிகள் ஒருவர் மீது ஒருவர் அன்பு வைத்து வாழ்கின்றனர். கணவன் விதவைப் பெண் ஒருத்தியுடன் உறவு கொண்டு விட, மனைவி அவனைப் பிரிந்து வாழ்கிறாள். தன் மகனையும் தன்னோடு வளர்க்கிறான்.
5 வருடங்களுக்குப் பிறகு நடக்கும் சம்பவங்களின் மூலம் அந்தக் குழந்தை மூலம் இருவரும் இணைகின்றனர். ஒருவனுக்கு ஒருத்தி என்னும் பண்பாட்டுடன் வாழ வேண்டும். இல்லை என்றால் அவர்கள் வாழ்க்கை நரகமாகி விடும் என்பதை இந்தப்படம் உணர்த்துகிறது.
ஒரு கை ஓசை
பாக்யராஜ் நடித்து இயக்கிய படம் ஒரு கை ஓசை. வாய் பேச முடியாத நாயகன் அவ்வூருக்கு வரும் விதவை டாக்டரைக் காதலிக்கிறான். இருவரும் திருமணம் செய்து கொள்ளும் நேரத்தில் இறந்து போனதாகக் கருதப்பட்ட டாக்டரின் கணவன் வருகை தருகிறான்.
அப்போது நாயகனுக்கு பேச்சு வருகிறது. ஆனால் பேச வழியின்றி ஊமையாகிறான். விதவை மறுவாழ்வை ஆதரிக்கும் படம். கடைசியில் விதவை மறுமணம் நடந்ததா இல்லையா என்பதை வெள்ளித்திரை விளக்குகிறது.