Cinema News
எப்பவுமே கமல்தான் ஃபர்ஸ்ட்!.. மனுசன் இவ்வளவு பண்ணிட்டு சைலண்ட்டா இருக்காரே!.. வாங்க பார்ப்போம்!..
Kamalhaasan: 1960ம் வருடம் ஏவிஎம் தயாரிப்பில் வெளிவந்த களத்தூர் கண்ணம்மா படத்தின் மூலம் சிறுவனாக கோலிவுட்டில் அடியெடுத்து வைத்தவர்தான் கமல்ஹாசன். சிறுவனாக இருக்கும்போதே சிறப்பாக நடித்து பலரையும் கவர்ந்தார். அதன்பின், பாலச்சந்தரால் பட்டை தீட்டப்பட்டு முழு நடிகராக மாறினார்.
நம்பர் ஒன்:
தமிழ் சினிமாவில் யாரும் செய்து பார்க்காத பல பரிசோதனை முயற்சிகளை செய்து பார்த்தவர் கமல்தான். திரைத்துறையை பொருத்தவரை ரஜினியை நம்பர் ஒன் நடிகர் என சொல்வார்கள். அது வசூலில் மட்டுமே. ஆனால், புதிய முயற்சி, சாதனை என பார்த்தால் அதில் நம்பர் ஒன் கமல்ஹாசன் மட்டுமே. அப்படி அவர் முதலில் செய்த விஷயங்கள் பற்றி பார்ப்போம்.
எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் ஆகியோரின் படங்களில் சிறுவனாக நடித்த பெருமை கமலுக்குண்டு. 27 வயதில் 100 படங்களில் நடித்த ஒரே நடிகர் கமல் மட்டும்தான். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் சொந்த குரலில் பேசி நடித்த ஒரே நடிகர் கமல் மட்டுமே.
அதிக விருதுகள்:
ஃபிலிம் பேர் விருதை 18 முறைக்கும் மேல் வாங்கிய ஒரே இந்திய நடிகர் கமல் மட்டுமே. 1982ம் வருடம் வாழ்வே மாயம், மூன்றாம் பிறை, சனம் தேரி கஸம், சகலகலா வல்லவன், ஹே தோ கமால் ஹோகயா என ஒரு வருடத்தில் 5 வெள்ளி விழா படங்களை கொடுத்து சாதனை படைத்தவர் கமல் மட்டுமே. கமர்ஷியல் படங்களில் நடித்த வந்த நேரத்தில் படம் முழுக்க பேசாமல் நடித்த முதல் நடிகர் கமல்தான். படத்தின் பெயர் பேசும் படம்.
தனது ரசிகர் மன்றங்களை நற்பணி மன்றங்களாக மாற்றிய முதல் இந்திய நடிகர் கமல்தான். சிவாஜி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு நடனம் சொல்லி கொடுத்து நடன இயக்குனராக பணிபுரிந்த ஒரே நடிகர் கமல் மட்டுமே. 5 மொழிகளில் 80க்கும் மேற்பட்ட பாடல்களை சொந்த குரலில் பாடியது கமல்ஹாசன் மட்டுமே. இந்திய திரையுலகில் அமிதாப்பச்சன், ராஜேஷ் கண்ணா ஆகிய ஹிந்தி நடிகர்களுக்கு பின் ஒரு கோடி சம்பளம் வாங்கிய முதல் தமிழ் சினிமா நடிகர் கமல் மட்டுமே.
பல மொழிகளில் வித்தகர்:
தமிழ், தெலுங்கு, மலையாளம் கன்னடம், ஆங்கிலம் மற்றும் ஃபிரென்ச் மொழிகளில் பேசத்தெரிந்த ஒரே நடிகர் கமல் மட்டுமே. விஸ்வரூபம் படம் மூலம் தமிழ் திரையுலகில் ஓடிடி என்பதை முதலில் அறிமுகம் செய்து வைத்ததும் அவர்தான். ஆனால், தியேட்டர் அதிபர்களின் எதிர்ப்பால் அது அப்போது நடக்கவில்லை. ஆனால், கொரோனா ஊரடங்கு காலத்தில் ஓடிடி கோலிவுட்டுக்குள் நுழைந்தது.
தமிழ் சினிமாவில் பல புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்து வைத்தவர் கமல்தான். கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் இல்லாத காலத்தில் அபூர்வ சகோதரர்கள் படத்தில் குள்ளமாக நடித்தார். மைக்கேல் மதன காமராஜன் படத்தில் 4 வேடங்களில் நடித்தார். தமிழ் திரையுலகில் தேவர் மகன் படத்தில்தான் திரைக்கதை எழுதுவதற்கு முதன் முதலாக மென்பொருள் (Software) பயன்படுத்தப்பட்டது.
சிவாஜிக்கு முதல் தேசிய விருது:
தேவர் மகன் படம் மூலம் சிவாஜி கணேசனுக்கு தேசிய விருதை பெற்று தந்ததும் கமல்தான். ஆனால், துணை நடிகர் பிரிவு என்பதால் கோபப்பட்ட கமல் அந்த விருதை வாங்க செல்ல சிவாஜியை அனுமதிக்கவில்லை. தமிழ் சினிமாவில் குருதிப்புனல் படத்தில்தான் முதன் முதலாக Dolby Stereo தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டது.
பிராஸ்தடிக் மேக்கப் என்கிற கலையை முதன் முதலாக இந்திய படத்தில் அறிமுகம் செய்து வைத்தார் கமல். தசாவதாரம் படம் மூலம் 10 வேடங்களில் நடித்த முதல் நடிகரும் கமல்தான். விருமாண்டி படத்தில்தான் முதன் முதலில் லைவ் சவுண்ட் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் ஆஸ்கருக்கு அதிகமுறை பரிந்துரை செய்யப்படது கமல்ஹாசனின் படங்கள்தான்.
மூன்று தேசிய விருதுகள், பத்மஸ்ரீ, பத்ம பூஷன், செவாலியே, கலைமாமணி, பல பிலிம்பேர் விருதுகள், நந்தி விருதுகள், தமிழ்நாடு அரசு விருதுகள் என அதிக விருதுகளை குவித்தவர் நடிகர் கமல்.
இப்படி பல சாதனைகளை செய்து விட்டு அதை தம்பட்டம் அடித்துக்கொள்ளாமல் இருப்பவர்தான் கமல்ஹாசன்!..
இதையும் படிங்க: சிறுவனாக கமல் பார்த்த முதல் ஷூட்டிங்!.. நடித்த முதல் காட்சி!.. ஒரு பிளாஷ்பேக்!…