அந்த விஷயத்தில் விஜய் அந்த மாதிரி!.. அஜித் வேற மாதிரி!.. சீக்ரெட் சொன்ன நடிகர் மாரிமுத்து!…
தமிழ் சினிமாவில் பெரும் போட்டி எனில் அது விஜய்க்கும், அஜித்துக்கும்தான். ரஜினி - கமல் படங்களுக்கு எப்படி போட்டி இருந்ததோ அது தற்போது விஜய் - அஜித்துக்கும் தொடர்கிறது. நடிகர் விஜய் தனது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்குனர் என்பதால் அதை வைத்து சினிமாவுக்கு வந்தவர்.
நடிகர் அஜித்தோ எந்த பின்புலமும் இல்லாமல் தன்னுடையை முயற்சியில் சினிமாவில் படிப்படியாக வளர்ந்தவர். இரண்டு பேருக்குமே துவக்கம் சரியாக அமையவில்லை. அதன்பின் ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகராக மாறியவர்கள். விஜயை ஒப்பிட்டால் அஜித் அதிக தோல்விப்படங்களை கொடுத்தவர் என சொல்லலாம். ஆனாலும், தற்போது மாஸ் நடிகராக அவர் உருவெடுத்துவிட்டார். அஜித்தை விட விஜயின் சம்பளம் எப்போதும் பல கோடிகள் அதிகமாக இருக்கும். ஆனால், துணிவு வெற்றிக்கு பின் அஜித்தும் விஜயின் சம்பளத்தை நெருங்கிவிட்டார்.
விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் லியோ படத்தில் நடித்துவருகிறார். அஜித் அடுத்து மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இதற்கான கதை விவாதம் இப்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தமிழ் சினிமாவில் சில படங்களை இயக்கிவரும், பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவருமான நடிகர் மாரிமுத்து ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ‘அஜித் வெளிப்படையாக பேசும் குணம் கொண்டவர். அவருக்கு என்ன தோன்றுகிறதோ அதை அப்படியே சொல்லிவிடுவார். எதையும் மனதில் வைத்துக்கொள்ள மாட்டார். ஆனால், விஜய் அதற்கு அப்படியே நேர் எதிரானவர். மனதில் நினைப்பதை வெளியே சொல்ல மாட்டார். ஒருவர் மீது எவ்வளவு கோபம் இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் அவரிடம் சிரித்துபேசுவார். மிகவும் பொறுமையானவர்’ என மாரிமுத்து கூறியுள்ளார்.