பெரிய மீசையை பிய்த்து எறிந்தார்...! இயக்குனருக்குக் கடுப்பைக் கிளப்பிய எம்.ஆர்.ராதா...
1976ல் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் தசாவதாரம் என்ற படத்தை இயக்கினார். இது புராண கால படம். ரவிக்குமார், ஜெயச்சித்ரா, சீர்காழி கோவிந்தராஜன், ஜெமினி கணேசன், பி.எஸ்.வீரப்பா, கே.ஆர்.விஜயா என பலர் நடித்திருந்தனர். இவர்களுடன் எம்.ஆர்.ராதா இரண்யகசிபு என்ற அரக்கனாக நடித்திருந்தார்.
படப்பிடிப்பின் போது இவர் செய்த ரகளைக்கு அளவே இல்லை. டைரக்டருக்கே ஒரு கட்டத்தில் கடுப்பை உண்டாக்கினார். அந்த சம்பவம் பற்றி இங்கு பார்ப்போம்.
அசுரனின் வேடம் என்பதால் எம்.ஆர்.ராதாவுக்கு பயங்கரமான பெரிய மீசை, கிரீடம், கவசம் என வைக்கப்பட்டு மேக் அப் போடப்பட்டது. கண்ணாடியில் தன் உருவத்தைப் பார்த்த எம்.ஆர்.ராதா கடுப்பாகி விட்டார். என்னய்யா என் மூஞ்சியை இவ்ளோ பயங்கரமா ஆக்கிட்டே என்று மேக் அப் மேனிடம் எரிந்து விழுந்தார்.
டைரக்டர் தான் இப்படி மேக் அப் போடச் சொன்னார் என்றார். கூப்பிடுய்யா டைரக்டரை என்று கத்தினார்.
கே.எஸ்.ஜி. வந்தார். அப்போது எம்.ஆர்.ராதா அவரிடம், நான் அசுரன்கறதாலே இப்படி கோரமா மேக் அப் போட்டுட்டீங்க. நான் அசுரன்னா என் மனைவியும் அப்படித் தானே இருக்கணும். பல் ரெண்டும் வெளியே தள்ளிக்கிட்டு தலையை விரிச்சிப் போட்டுக்கிட்டுத் தானே மேக் அப் போடணும். சௌகார் ஜானகியை மட்டும் அழகா காட்றீங்களே...? என்றார்.
கே.எஸ்.ஜி.குழம்பி விட்டார். நான் இப்படி பயங்கர உருவத்தோடு இருந்தா என் மனைவி எப்படி என் மேல பிரியமா இருப்பா? லால் பகதூர் சாஸ்திரி நாலரை அடி உயரம்...குள்ளமாத் தான் இருக்கார்.
அவரு பிரதமர் பதவியிலே இருக்காரே. எவ்வளவு உயர்ந்த பதவி...! அதே போல நானும் கதையில சாதாரண உருவத்தோட இருக்கேன். நான் பண்ற காரியங்கள்ல அசுரத்தனத்தைக் காட்டுறேன் என்றார்.
உடனே டைரக்டரும் வேறு வழியில்லாமல் அப்படியே செய்தார். எனக்கு வில்லன் கெட் அப் வரணும்னா ஆஜானுபாகுவா 2 அடியாள்களைப் போடுங்க என்றார். பெரிய மீசையைப் பிடுங்கி எறிந்தார்.
தொடர்ந்து அவருக்கு ஒரு வசனம் கொடுக்கப்பட்டது. ராதா படித்ததும் டைரக்டரைக் கூப்பிட்டார்.
படத்திலே நான் சிவாய நம அப்படீன்னு சொன்னா, என் நெத்தியில விபூதிப்பட்டையை போட்டுக்கணும். நமோ நாராயணா அப்படீன்னு சொன்னா நாமம் போட்டுக்கணும். ரெண்டும் இல்லாம இருந்தா நான் இரண்யாய நம அப்படீன்னு சொல்றதா வசனம் வருது. அப்போ நான் பட்டை போடுறதா, நாமம் போடுறதா? ரெண்டுமே தப்பாச்சே என்கிறார்.
டைரக்டர் யோசிக்கிறார். பட்டையும் வேண்டாம். நாமமும் வேண்டாம். சந்திரப் பிறை மாதிரி ஒரு பொட்டு மட்டும் வையுங்க என்கிறார். அதே போல பொட்டு வைக்கப்பட்டது.
எல்லாம் முடிந்ததும் ராதாவின் உடல் முழுக்க நகைகள் அணிவிக்கப்பட்டன. என்ன இது..? ஏன் எதை எதையோ உடம்புல கொண்டு வந்து மூட்டையா கட்றீங்க..? என்கிறார். ஒத்திகை நடந்தது. கொஞ்சம் கூட இன்ட்ரஸ்ட்டே இல்லாம வசனம் பேசி நடித்தார்.
டைரக்டருக்கு ரொம்ப வருத்தமாயிடுச்சு. என்னடா செய்வது? இவருக்கு புராண படத்துல நடிக்க பிடிக்கலையா என குழம்பினார். அருகில் இருந்தவரிடம் முணுமுணுத்தார்.
பிறகு டேக் ஆனது. காமிரா ஓடத் தொடங்கி ஆக்ஷன் சொன்னதும்...எம்.ஆர்.ராதா வசனத்தைப் பிச்சி உதறினார். கையிலே வாள்...அசத்தலான நடிப்பைக் கொடுத்தார். சுற்றி நின்றவர்களுக்கு ஒரே ஆச்சரியம்..! டைரக்டர் ஓடி வந்து கட்டியணைத்துக் கொண்டார். அண்ணே அசத்திட்டீங்கண்ணே...என்று கண் கலங்கினார்.