தேவர்மகன் பாத்துட்டு சிவாஜி்யே பாராட்டிய நடிகர்!.. ஆனா அது கமல் இல்ல!..
கமல்ஹாசன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குனர் பரதன் இயக்கிய திரைப்படம் தேவர்மகன். இந்த படத்தில் கமல்ஹாசனின் அப்பாவாக சிவாஜி நடித்திருப்பார். கிராமத்தில் வாழும் சிவாஜியை பார்க்க சிட்டியிலிருந்து தனது காதலியுடன் கமல் அப்பாவை பார்க்க வருவார். பரம்பரை பகையிலும், துரோகத்திலும் சிக்கி அவர் எப்படி அந்த ஊரை காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை.
இந்த படத்தில் கமலின் காதலியாக கவுதமியும், மனைவியாக ரேவதியும் நடித்திருப்பார்கள். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட். குறிப்பாக இஞ்சி இடுப்பழகி பாடல் சூப்பர் மெலடியாக அமைந்தது. 1992ம் வருடம் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களை கவர்ந்து பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் வடிவேலுக்கு ஒரு சிறப்பான வேடத்தை கமல் கொடுத்திருந்தார்.
வயதான பின் சிவாஜி நடித்த படங்களில் ‘தேவர் மகன்’ திரைப்படம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த படமாகும். ஏனெனில், அவரின் கதாபாத்திரத்தை கமல்ஹாசன் சிறப்பாக அமைத்திருந்தார் இந்த படத்தில் அசத்தல் வில்லனாக நாசர் கலக்கியிருப்பார். சிவாஜிக்கு எதிராக வசனம் பேசி நடிக்கும் காட்சிகளில் மிரட்டலான நடிப்பை கொடுத்திருப்பார்.
இந்த படத்தில் நடித்த அனுபவம் பற்றி ஊடகம் ஒன்றில் பேசிய நாசர் ‘கதாநாயகனாக நடிக்க ஆசைப்பட்டு நடித்த படங்கள் வெற்றியை பெறவில்லை. கமல்தான் எனக்குள் இருக்கும் திறமையை கண்டுபிடித்து அவர் நடிக்கும் படங்களில் எனக்கு சரியான கதாபாத்திரத்தை கொடுத்து என்னை சிறந்த குணச்சித்திர நடிகராகவும், வில்லனாகவும் மாற்றினார். தேவர்மகன் படத்தை சிவாஜி சார் பார்த்துவிட்டு உடனே என்னை தேடி அழைத்து பாராட்டினார். அதை விட பெரிய விருது ஒன்று எனக்கு தேவையில்லை’ என நாசர் பேசியிருந்தார்.