பாட்டு இல்லாமலே சிவாஜி பாடி நடித்த பாடல்!.. நடிகர் திலகத்துக்கு இவ்வளவு ஞாபக சக்தியா?!..

நடிகர் திலகம் சிவாஜி நடிப்பில் எவ்வளவு ஆற்றல் பெற்றவர் என்பது எல்லோருக்கும் தெரியும். அதற்கு காரணம் அவரது திறமை என்றாலும் சிறு வயது முதலே பல வருடங்கள் அவர் கற்ற நாடக அனுபவம்தான். பல வருடங்கள் நாடகங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.
பல நாடகங்களில் பெண் வேடங்களிலும் நடித்திருக்கிறார். அதேபோல், எவ்வளவு பெரிய வசனம் என்றாலும் மனப்பாடம் செய்து அசத்தி விடுவார். 60களில் கலைஞர் கருணாநிதி போன்ற சிலர் வசனகர்த்தாக்கள் பக்கம் பக்கமாக வசனம் எழுதுவார்கள். சிவாஜி அதை மனப்பாடம் செய்து அழகாக நடித்தும் விடுவார். அவர் அறிமுகமான பராசக்தி படமே அதற்கு பெரிய சாட்சி.
இதையும் படிங்க: காட்ஃபாதர் ஸ்டைலில் சிவாஜி நடிக்கவிருந்த படம்!.. கடைசி நேரத்தில் எஸ்கேப் ஆன கமல்!..
மேலும், பெரிய வசனத்தை சிங்கிள் ஷாட்டில் பேசி நடித்த முதல் தமிழ் சினிமா நடிகரும் நடிகர் திலகம்தான். பீம்சிங் இயக்கத்தில் சிவாஜி, பத்மினி நடித்து உருவான திரைப்படம் ராஜா ராணி. இந்த படத்திற்கு வசனம் எழுதிய கலைஞர் கருணாநிதி இந்த படத்தில் ‘சேரன் செங்குட்டுவன்’ நாடகத்தில் சிவாஜி நடிப்பது போல ஒரு காட்சியை எழுதியிருந்தார்.
அது பெரிய வசனம். எனவே, பிலிமில் எடுக்கும்போது 850 அடி வரும். அதை ஒரே ஷாட்டில் எடுக்க திட்டமிட்டார் பீம்சிங். ஆனால், இது சிவாஜியால் முடியுமா என்கிற சந்தேகம் அவருக்கு இருந்தது. ஆனால், சிவாஜியோ நான் நடிக்கிறேன் என சொல்லி அந்த வசனத்தை மனப்பாடம் செய்து சிங்கிள் ஷாட்டில் நடித்து அசத்தினார்.
ஏசி திருலோகச்சந்தர் இயக்கத்தில் சிவாஜி, ஜெயலலிதா, லதா என பலரும் நடித்து உருவான திரைப்படம் அவன்தான் மனிதன். இந்த படத்தில் இடம் பெற்ற ஒரு பாடல் காட்சியை படப்பிடிப்பதற்காக சிவாஜி உள்ளிட்ட படக்குழு சிங்கப்பூருக்கு போனது. ஆனால், அவர்கள் எடுக்க வேண்டிய பாடல் காட்சியின் ஒலிநாடா சென்னையிலிருந்து வரவில்லை. தவறுதலாக வேறு ஒரு படத்தின் ஒலிநாடாவை அனுப்பி விட்டனர்.
இதையும் படிங்க: நான் நடிக்க மாட்டேன்.. அவனை நடிக்க வை!. கமல் படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி…
என்ன செய்வது என இயக்குனர் யோசித்துக்கொண்டிருந்தார். இதை சிவாஜியிடம் சொல்ல அவரோ கூலாக ‘நீங்க படிப்பிடிப்புக்கு தேவையான வேலையை பாருங்க’ என சொன்னார். ஏனெனில், அந்த பாடல் ஸ்டுடியோவில் ஒலிப்பதிவு செய்யப்பட்டபோது சிவாஜி அங்கிருந்தார். அதோடு, அந்த பாடல் வரிகளும் அவருக்கு மனப்பாடம் ஆகிவிட்டது.
பாடலே இல்லாமல் வரிகளை முனுமுனுத்தவாறு சிவாஜி முழுப் பாடலுக்கும் நடித்து முடித்தார். படக்குழுவே ஆச்சர்யப்பட்டு போனது. அதன்பின் சென்னை வந்து அந்த பாட்டோடு சிவாஜியின் நடிப்பை இணைந்து காட்சியாக பார்த்தால் வரிகளோடு சிவாஜியின் உதட்டசைவு கணக்கச்சிதமாக பொருந்தி போனதை பார்த்து இயக்குனர் உள்ளிட்ட படக்குழு வியந்து போனார்களாம்.
அதுதான் நடிகர் திலகம்!..