கொடூர மந்திரவாதி வேடம் போட்டே கல்லா கட்டியவர்... நடிப்பை எங்கிருந்து சுட்டார் தெரியுமா?

S.V.Ranga rao
தமிழ் சினிமா நடிகர்களில் மிகவும் மாறுபட்ட கதாபாத்திரங்களை அதுவும் இளம் வயதிலேயே முதுமையான வேடங்களை அதிகமாக ஏற்று கலக்கியவர் வெகு சிலர் தான். அவர்களில் ஒருவர் எஸ்.வி.ரங்கராவ். இன்னொருவர் வி.கே.ராமசாமி. இங்கு நாம் எஸ்.வி.ரங்கராவைப் பற்றிப் பார்ப்போம்.
காலேஜ்ல பிஎஸ்சி. சயின்ஸ் படித்தாராம். உடனே தீயணைப்புத் துறையில் வேலை கிடைத்தது. ஆனாலும் பள்ளியில் படிக்கும்போதே நடிப்பு மேல் தணியாத ஆசை. அங்கு நாடகத்தில் இவர் போட்ட முதல் வேடம் பில்லி சூனிய மந்திரவாதி.
இவர் காக்கிநாடாவில் உள்ள அமெச்சூர் நாடகக்குழுவில் இணைந்து நடித்து தன் திறமையை வளர்த்தாராம். அப்போது இவருடன் இயக்குனர் பிஎஸ்.சுப்பாராவ், அஞ்சலிதேவி, ஆதிநாராயண ராவ் ஆகியோரும் நடித்தார்களாம்.
1940களில் சினிமா வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்துள்ளார். அப்போது இதன் பெயர் மதராசப்பட்டினம். முதன் முதலாக 1946ல் ஒரு தெலுங்கு படம் நடித்தார். அது தான் வரோதினி. பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. 1947ல் அவருக்கு மனதேசம் படம் கைகொடுத்தது. அடுத்ததாக பல்லேட்டூரி பில்லா படம் அவரைத் தூக்கி நிறுத்தியது. இவை அவரை தமிழ்சினிமாவுக்குள் கொண்டு வந்தது. இங்கு இவரது முதல் படம் பாதாள பைரவி.

SVR
1951ல் வெளியானது. அவருக்கு இந்தப் படத்தின் கேரக்டர் அல்வா சாப்பிட்டது போல இருந்தது. அது தான் நேபாள மாந்தீரிகன் வேடம். தான் கற்ற வித்தைகள் எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாக இறக்கினார். படம் மெகாஹிட்டானது. பட்டி தொட்டி எங்கும் சக்கை போடு போட்டது. அதற்கு காரணமே இவர் போட்ட நேபாள மந்திரவாதி வேடம் தானாம்.
இந்தப் படத்தில் ஹீரோ என்டிஆர்., ஹீரோயின் மாலதி. ஹீரோவை மிரட்டி மாலதியை அடையத் துடிக்கும் மந்திராவதி தான் எஸ்.வி.ரங்கராவ். பெரிய தந்திரக்காரனாக நடித்து அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் மிரள வைத்தார். இந்தப் படம் தெலுங்கிலும் வெள்ளி விழா கண்டது.
இவரது பாடி லாங்குவேஜ், குரல் வளம் இவர் ஏற்ற மாந்திரீக வேடத்திற்கு உயிர் கொடுத்தன. இவ்வளவு நுட்பமாக ஒருவர் நடிக்க முடியுமா என அனைவரும் வியந்தனர். இந்த வெற்றிக்குப் பின்னால் ஒரு காரணம் மறைந்து இருந்தது. அதாவது இந்த அலட்டல், மிரட்டல், உடல் மற்றும் குரல் லாவகங்கள் என எப்படி இவருக்குக் கைவசம் வந்தன என்றால், இவரது நடிப்பு முழுவதும் பிரபல ஆங்கில நாடக ஆசிரியர் ஷேக்ஸ்பியரிடமிருந்து உள்வாங்கி நடித்தாராம்.
இதையும் படிங்க... க்ளீனர் முதல் ஹீரோ வரை! நடிகர் சூரியின் யாரும் பார்த்திராத முகங்கள்.. உண்மையிலேயே உழைப்பாளிதான்
இவர் புராணகாலப் படங்களில் துரியோதனன், கம்சன், ராவணன், நரகாசுரன், கடோத்கஜன் போன்ற வேடங்களை ஏற்று அசத்தலான நடிப்பை வெளிக்காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரம் இவர் எம்ஜிஆர், சிவாஜி படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து அசத்தினார்.