ரஜினியையே அசத்திய நடிகரின் கம்பீரமான உடற்கட்டு!.. நடிப்பில் மட்டுமல்ல.. அதுக்கும் மேல!..
மதயானைக் கூட்டம் படத்தில் வீரத்தேவராக வாழ்ந்து முத்தாய்ப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர் நடிகர் வேல ராமமூர்த்தி. கோபம், தாபம், அனுதாபம், நேர்மை, மூர்க்கக்குணம் என பல கோணங்களில் தனது நடிப்பின் வீச்சை அழுத்தமாக வெளிப்படுத்தியிருப்பார்.
கொம்பன் படத்தில் துரை பாண்டியாகவும், கிடாரி படத்தில் கோம்பையாகவும், அறம் படத்தில் எம்எல்ஏ வாகவும், சேதுபதி படத்தில் வாத்தியாராகவும்,புலிக்குத்தி பாண்டி படத்தில் சன்னசி தேவராகவும் வந்து கலக்கியிருப்பார். இவர் வரும் காட்சியில் ரசிகன் படத்துடன் ஒன்றிப்போவான். அந்த அளவு யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி அசர வைத்து விடுவார்.
இவர் சினிமாவில் வருவதற்கு முன் ஒரு மிலிட்டரி மேனாக இருந்தார். பின்னர் போஸ்ட் ஆபீஸில் வேலை பார்த்தார்.
குருதியாட்டம், பட்டத்து யானை, வனமகன், தொண்டன், ரஜினிமுருகன், கொம்பன், அப்பா, ஸ்கெட்ச், என்னை நோக்கி பாயும் தோட்டா போன்ற படங்களில் இவர் நடிப்பு செம மாஸாக இருக்கும். இவர் படத்தில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் பெரிய எழுத்தாளராகவும் உள்ளார். இவர் பல சிறுகதைகள் எழுதியுள்ளார். குற்றப்பரம்பரை நாவலையும் எழுதியுள்ளார்.
கிராமத்துக்கே உரிய கட்டுக்கோப்பான உடல், கம்பீரமான தோற்றம், சவாலான கேரக்டர்களுக்கு இப்போது இவரது பெயர் தான். அண்ணாத்தே படத்தில் ரஜினியோட மாமனாக வந்து அசத்துவார். தனது உடற்கட்டையும், திரையுலக அனுபவங்களையும் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார்.
கிராமத்து உணவு, மிலிட்டரின்னு பல இடங்களில் நல்ல உணவு, ஆரோக்கியம் தரும் உடற்பயிற்சி, வேலைகள் என பல சூழ்நிலைகளில் வாழ்ந்து வந்ததால் தான் இந்த உடம்பு கட்டுக்கோப்பாக வந்தது. மனதில் எண்ணங்கள் நல்லபடியாக வைத்துக்கொண்டாலே ஆரோக்கியம் சீராகும்.
1974ல இருந்து சிறுகதை எழுதுறேன். 48 வருடமாக கதை எழுதிக்கொண்டு இருக்கிறேன். இருளப்பசாமி, வேட்டை என பல சிறுகதைகள் பெரிய அளவில் பேசப்பட்டன. குற்றப்பரம்பரை நாவலாக வெளியானது. நான் இன்னைக்கு சினிமாவில் ஒவ்வொரு கேரக்டராகவும் இருக்கேன்னா அதுக்கு காரணம் என் கதை...என் எழுத்து...தான்.
மண்வாசம், வட்டார வழக்கு என பல விஷயங்கள் என் எழுத்தில் உண்டு. ரஜினி சாருடன் அண்ணாத்தே படத்தில் நடித்தது ரொம்ப வித்தியாசமானது. முதல் காட்சியில் சிறுத்தை சிவா டைரக்ட் பண்றாரு.
900 பேர் ரஜினி சார் பக்கத்தில் வந்து நிற்க ஆசைப்படுறாங்க. அப்போ டைரக்டர் மைக்ல சொல்றாரு...மூர்த்தி சார்...ரஜினி சாருக்குப் பக்கத்தில வந்து நில்லுங்க...அப்படி யாருடா மூர்த்தி சாருன்னு ரஜினி சாரோட சேர்ந்து எல்லாரும் பாக்குறாங்க. நான் போனேன். கும்பிட்டேன். அப்படி பார்த்தாரு.
எப்படி மெயிண்டெய்ன் பண்றீங்க...உடம்ப எப்படி மெயிண்டைன் பண்றீங்க...சார் நான் மில்டரில இருந்தது....ஓ...மிலிட்டரில இருந்ததா...கிடாரில அப்படியே வருவீங்கள்ல வேல் கம்போடு...என்று அவர் சொன்னது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
அதிலிருந்து அவருக்கும் எனக்குமாக நல்ல நட்பு இருந்து வந்தது. டைரக்டர் பாண்டிராஜ் நம்ம வீட்டுப்பிள்ளை படப்பிடிப்பின் போது எனது நடிப்பை மானிட்டரில் பார்த்து விட்டு அப்படியே திரும்பிப் பார்த்து ஒரு சிரிப்பு சிரித்தார். என்ன சார்னு கேட்டேன். நடிக்கவா செய்றீங்க...வாழ்றீங்கன்னாரு.