Cinema News
மோகன்லால் பலமுறை சொல்லியும் கேட்காத விஜய்!.. கோபத்தில் பேசாமல் போன நடிகர்!..
அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரால் சினிமாவுக்கு வந்தவர் விஜய். துவக்கத்தில் அப்பாவின் இயக்கத்தில் மட்டும் நடித்து வந்த விஜய்க்கு விக்ரமன் இயக்கிய பூவே உனக்காக திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது. அதன்பின் பல ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகராக வளர்ந்தார்.
துவக்கத்தில் விஜயின் படங்களில் வையாபுரி, சாப்ளின் பாலு, விவேக், மயில்சாமி போன்ற பல காமெடி நடிகர்கள் நடித்து வந்தனர். ஆனால், அவர் எப்போது மாஸ் ஹீரோவாக மாறினாரோ அப்போது யாருடனும் அவர் இணைந்து நடிப்பதில்லை என முடிவெடுத்தார். அஜித்துடன் ‘ராஜாவின் பார்வையிலே’ படத்தில் நடித்தவர் அதன்பின் அவருடன் நடிக்கவில்லை.
இதையும் படிங்க: தன் அப்பா எப்படிப்பட்டவர்? விஜயே சொன்ன சுவாரஸ்ய தகவல்.. இப்படியுமா ஒரு தந்தை?
அதேநேரம், லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதிக்கு முக்கிய வேடம் கொடுக்கப்பட்டிருந்தது. விஜய் சேதுபதிக்கு வில்லன் வேடம் என்றாலும் இப்படத்தின் இரண்டாவது ஹீரோ போல அவருக்கு நிறைய காட்சிகள் இருந்தது. இந்த படத்திற்கு முன்பே ஜில்லா படத்தில் மலையாள நடிகர் மோகன்லாலுடன் நடித்திருந்தார்.
இந்த படத்தில் விஜயின் வளர்ப்பு தந்தையாக மோகன்லால் நடித்திருந்தார். இந்த படத்தில் கும்கி பட நடிகர் ஜோ மல்லூரியும் நடித்திருந்தார். சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய ஜோ மல்லூரி ‘ஜில்லா படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது விஜய் எனக்கும், மோகன்லாலுக்கும் விருந்து கொடுக்க அவரின் வீட்டிற்கு அழைத்தார்.
மோகன்லால் அவரின் மனைவியுடன் வந்திருந்தார். வீட்டில் விஜயும் அவரின் மனைவி சங்கீதாவும் இருந்தனர். அவர்கள் இருவரும் எங்களை வரவேற்று உபசரித்து உணவு பரிமாறினார்கள். அப்போது 3 இலை மட்டுமே போடப்பட்டது. விஜய் சாப்பிடவில்லை. மோகன்லால் பல முறை ‘சாப்பிடு விஜய்’ என சொல்லியும் விஜய் சிரித்துக்கொண்டே சாப்பிடுவதை தவிர்த்துவிட்டார்.
எனவே, அவர் மேல் எனக்கு கோபம் வந்தது. அடுத்தநாள் படப்பிடிப்பு தளத்தில் அவர் என்னை பார்த்தபோது பேசாமல் சென்றுவிட்டேன். என்னை அழைத்தார் விஜய். அவரிடம் ‘என்ன விஜய்.. மோகன்லால் அவ்வளவு சொல்லியும் நீங்க சாப்பிடாம சிரிச்சிக்கிட்டே இருந்திட்டீங்க. அதனால் உங்கள் மேல எனக்கு கோபம்’ என சொன்னேன்.
அதற்கு விஜய் ‘அண்ணே என் வீட்டிற்கு யார் வந்தாலும் அவர்களுக்கு விருந்து அளித்துவிட்டு அவர்கள் சென்ற பின்னரே நான் சாப்பிடுவேன். இது என் அப்பா,அம்மாவிடம் கற்று கொண்டது. அதனால்தான் நான் சாப்பிடவில்லை’ என சொன்னார். அவர் அப்படி சொன்னதும் அவர் மீது எனக்கிருந்த கோபம் போய்விட்டது.